பக்கம் எண் :

திருவாசகம்
41


95. எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
தானே யாகிய தயாபரன் எம்மிறை
சந்திர தீபத்துச் சாத்திர னாகி
அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட்
சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்

100. மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை யாண்ட பரிசது பகரின்
ஆற்ற லதுவுடை யழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்

105. ஊனந் தன்னை ஒருங்குட னறுக்கும்
ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கடை யாம லாண்டுகொண் டருள்பவன்

110. கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்
மூல மாகிய மும்மல மறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்

115. அரியொடு பிரமற் களவறி யாதவன்
பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழிஅருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்
பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்

120. உத்தர கோச மங்கையூ ராகவும்
ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய
தேவ தேவன் திருப்பெய ராகவும்
இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி
அருளிய பெருமை யருண்மலை யாகவும்

125. எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்
அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி
நாயி னேனை நலமலி தில்லையுள்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல வென்னை ஈங்கொழித் தருளி