130. அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற வொன்ற வுடன்கலந் தருளியும் எய்தவந் திலாதார் எரியிற் பாயவும் மாலது வாகி மயக்கம் எய்தியும் பூதல மதனில் புரண்டுவீழ்ந் தலறியும் 135. கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி நாத நாத என்றழு தரற்றிப் பாதம் எய்தினர் பாதம் எய்தவும் பதஞ்சலிக் கருளிய பரமநா டகவென் றிதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும் 140. எழில்பெறும் இமயத் தியல்புடை அப்பொற் பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக் கருளிய திருக்கூத் தழகுறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் 145. பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் ஒலிதரு கைலை யுயர்கிழ வோனே. திருச்சிற்றம்பலம் சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை அஃதாவது, சிவபெருமான் ஆங்காங்கு அடியார்கட்கு அருள் புரிந்த அருட்செயல்களின் முறைமை என்பதாம். தில்லை மூதூ ராடிய திருவடி பல்லுயி ரெல்லாம் பயின்ற னாகி எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோ ருலகும் 5. துன்னிய கல்வி தோற்றியும் அழித்து என்னுடை யிருளை ஏறத் துரந்தும் அடியா ருள்ளத் தன்புமீ தூரக் குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும்
|