22. கோயிற்றிருப்பதிகம் (தில்லையில் அருளிச்செய்தது) இப்பதிகம் தில்லையில் பாடப்பட்டமையால், 'கோயில் திருப்பதிகம்' எனப்பட்டது. தில்லையைக் கோயில் என்று குறிப்பிடுதல் மரபு. அனுபோக இலக்கணம் சிவானந்த அனுபவத்தின் இயல்பு எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே. பதப்பொருள் : தேறலின் தெளிவே - தேனின் தெளிவானவனே, சிவபெருமானே - சிவபிரானே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவனே, ஈறு இலா - அளவில்லாத, பதங்கள் யாவையும் கடந்த - பதவிகள் எல்லாவற்றையுங்கடந்து நின்ற, இன்பமே - ஆனந்தமே, என்னுடை அன்பே - என்னுடைய அன்பு உருவமே, மாறி நின்று - பகைத்து நின்று, என்னை மயக்கிடும் - என்னை மயங்கச் செய்கின்ற, வஞ்சப்புலன் ஐந்தின் - வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களின், வழி அடைத்து - வாயில்களையும் அடைத்து, அமுதே ஊறி நின்று - அமுதமே சுரந்து நின்று, என் உள் எழு பரஞ்சோதி - என்னகத்தே தோன்றுகின்ற மேலான ஒளியே, உள்ள ஆ காண - உன்னை யான் உள்ளவாறு காணும்படி, வந்தருளாய் - வந்தருள்வாயாக. விளக்கம் : இந்திரன், பிரமன், திருமால், முதலாக உள்ள எண்ணற்ற தேவர்களுக்கும் உரிய எண்ணற்ற பதவிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் சிவபெருமானாதலின், 'ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த' என்றும், இவர்கள் எல்லோருடைய இன்பங்களினும் மேலான இன்பவடிவினன் அப்பெருமானாதலின், 'இன்பமே' என்றும், அன்பே சிவமாதலின், 'அன்பே' என்றும் கூறினார். மாறி நின்று மயக்குதலாவது, செல்லுகின்ற நன்னெறியில்
|