செல்லவிடாமற்செய்தலாம். புலன்கள் அறிவைத் தம் வழியே ஈர்க்கும் தன்மையுடையவாதலின், 'மயக்கும் வஞ்சப்புலன்' என்றும், அவை அவ்வாறு ஈர்ப்பது, ஐம்பொறிகள் வழியாகவேயாதலின், 'வழி' என்றும், இறைவன் இன்பம் உள்ளேயிருந்து ஊறி எழும்பொழுது, அவ்வைம்பொறிகளும் செயலற்று ஒழிதலால், 'அடைத்து அமுதே ஊறி நின்று' என்றும் கூறினார். இறைவனை அகத்தே கண்டு இன்புற்றவர் புறத்தேயும் கண்டு களிக்க விழைந்து, 'உள்ளவா காண வந்தருளாய்' என்றார். இதனால், இறைவனை அகத்திற்காண்பது போலவே புறத்திலும் காணுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. 1 அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க்கசிந் துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம் மாறு முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெரு மானே சீருடைச் சிவபுரத் தரைசே. பதப்பொருள் : முன்புமாய் - எல்லாவற்றிற்கும் முன்னுமாய், பின்பும் - பின்னுமாய், முழுதுமாய் - முழுதுமாய், பரந்த - வியாபித்த, முத்தனே - மலமற்றவனே, முடிவு இலா - எல்லையற்ற, முதலே - பரம்பொருளே, தென்பெருந்துறையாய் - அழகிய திருப்பெருந்துறையையுடையவனே, சிவபெருமானே - சிவபிரானே, சீர் உடை சிவபுரத்து அரைசே - சிறப்புப் பொருந்திய சிவபுரத்துக்கு அரசனே, அன்பினால் - அன்பின் மிகுதியால், அடியேன் - அடியேனது, ஆவியோடு - உயிரோடு, ஆக்கை - உடம்பும், ஆனந்தமாய்க் கசிந்து உருக - இன்பவெள்ளமாய்க் கசிந்து உருகும்படி, என் பரம் அல்லா - என் நிலைக்குத் தகுதியில்லாத, இன் அருள் தந்தாய் - இனிய அருளைப் புரிந்தாய், இதற்கு - இந்தப் பேருதவிக்கு, யான் ஒர் கைம்மாறு இலன் - யான் உனக்குத் திரும்பச் செய்யக்கூடிய உதவி இல்லாதவனாயிருக்கிறேன். விளக்கம் : இறைவன் எல்லா இடங்களிலும் வியாபகமாய்ப் பரவி இருக்கிறான் என்பார், 'முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே' என்றார். இனி, எல்லாக் காலங்களிலும் இருக்கிறான் என்பார், 'முடிவிலா முதலே' என்றார். 'ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க்கசிந் துருக' என்றது, உள்ளக்கனிவோடு உடல் நெகிழ்ச்சியும் உண்டாதலைக் குறித்தபடி. ஒப்புயர்வில்லாத பெரியோனாகிய இறைவனுக்குச் சிற்றுயிர்கள் என்ன செய்ய இயலும் என்பார், 'யானிதற் சிலனொர் கைம்மாறு' என்றார். இதனால், இறைவன் கைம்மாறு கருதாத கருணையாளன் என்பது கூறப்பட்டது. 2
|