வியாபகமாய்க் கலந்திருக்கிறான் என்பார், 'நீருறு தீயே' என்றார். அடிகளுக்கு இறைவனே எல்லாமாய் இருக்கும் பொழுது, உலகில் சிலர் உறவும், சிலர் அயலும் ஆகாமையால், 'யாருற வெனக்கிங் காரயலுள்ளார்' என்றார். இதனால், இறைவன் அடியார்களுக்கு உறவும் பகையும் இல்லை என்று கூறப்பட்டது. 8 சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும்ஆ னந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே திருப்பெருந் துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய் வந்துநின் இணையடி தந்தே. பதப்பொருள் : சோதியாய்த் தோன்றும் உருவமே - ஒளியாய்த் தோன்றும் உருவமே, அரு ஆம் ஒருவனே - உருவமில்லாத ஒப்பற்றவனே, சொல்லுதற்கு அரிய - வாக்கினால் சொல்லுவதற்கு அருமையான, ஆதியே நடுவே அந்தமே - எப்பொருட்கும் முதலும் இடையும் கடையுமாயுள்ளவனே, பந்தம் அறுக்கும் - பிறவித் தளையை ஒழிக்கின்ற, ஆனந்த மா கடலே - பேரின்பப் பெருங்கடலே, தீது இலா நன்மை - தீமையே கலவாத நன்மையேயுடைய, திரு அருள் குன்றே - திருவருள் மலையே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, வந்து - குருவாய் எழுந்தருளி வந்து, நின் இணை அடி தந்து - உன் இரு திருவடியை எனக்கு அருளிய பின், நீ போவது ஓர் வகை யாது - நீ என்னை விட்டுப் போகின்ற வகை எங்ஙனம், எனக்கு அருளாய் - அதை எனக்குச் சொல்வாயாக. விளக்கம் : இறைவன் ஆனந்தமாய் இருந்து துன்பத்தைப் போக்குகின்றானாதலின், 'பந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலே' என்றார். இன்பம் அளவற்றது என்பதைக் குறிப்பிட, 'கடலே' என்றார். தீதில்லா நன்மையாவது, ஏனைய உலக நன்மையைப் போலத் தீமை கலவாத நன்மை. அது இன்பத்தைத் தருவது போலக் காட்டித் துன்பத்தையே தரும் என்க. ஆட்கொண்டபின் விட்டுச் செல்ல முடியாதாதலின், 'யாது நீ போவதோர் வகையெனக் கருளாய்' என்றார். இதனால், திருவருள் இன்பம் நிலையானது என்பது கூறப்பட்டது. 9
|