பக்கம் எண் :

திருவாசகம்
436


தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையோ ஈசா உடலிடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே.

பதப்பொருள் : சிந்தையே - எனது சித்தத்தையே, கோயில் கொண்ட - திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய, எம் பெருமான் - எமது தலைவனே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, எந்தையே - எம் தந்தையே, ஈசா - ஈசனே, உடலிடம் கொண்டாய் - எனது உடலை இடமாகக் கொண்டவனே, சங்கரா - சங்கரனே, தந்தது - எனக்கு நீ கொடுத்தது, உன் தன்னை - உன்னை, கொண்டது - அதற்கு ஈடாக நீ என்னிடம் ஏற்றுக்கொண்டது, என்றன்னை - என்னை, அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் - (உன்னை நீ எனக்குத் தந்ததால்) யான் முடிவு சிறிதுமில்லாத பேரின்பத்தை அடைந்தேன், நீ என்பால் பெற்றது ஒன்று யாது - நீ என்னிடத்தினின்றும் அடைந்த பயன் என்ன? ஒன்றும் இல்லை. ஆகவே, சதுரர் ஆர் - இக்கொள்ளல் கொடுத்தல்களைச் செய்த நம் இருவருள் திறமையுடையவர் யார்? (நானே திறமையுடையவன்); இதற்கு - இவ்வுதவிக்கு, யான் ஓர் கைம்மாறு இலன் - நான் ஒரு பிரதியுபகாரமும் செய்ய முடியாதவனாயினேன்.

விளக்கம் : உடல் இடம் கொள்ளுதலாவது, உள்ளம் வழியாக உடலிலும் வியாபித்திருத்தல். சித்தமிசை குடி கொண்ட அறிவுப் பொருள் உடல் முழுவதும் ஆனந்தத்தை நல்கிக்கொண்டிருக்கிறது என்க. பெருமான் தன்னைத் தந்து என்னைக் கொண்டது ஊதியமில்லா வாணிகமாயிற்று என்பதாம். இது நிந்தாஸ்துதி. கொல், ஓ - அசைகள்.

இதனால், இறைவனது கைம்மாறு கருதாத கருணை கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்