பக்கம் எண் :

திருவாசகம்
438


'விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்' என்றார். இனி அதனை அவன் அருளாலன்றித் தம் முயற்சியால் பெற முடியாதாதலின், செய்வகை அறியேன்' என்று இரங்குகிறார்.

இதனால், இறைவன் திருவடியினது அருமை கூறப்பட்டது.

1

புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றி னாய்பதை யேன்மனம் மிகஉருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பதப்பொருள் : திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, அண்டவாணரும் - தேவரும், பிறரும் - மற்றையோரும், புற்றுமாய் - தங்கள் உடம்பின்மேல் புற்று வளரப்பெற்றும், மரமாய் - மரம் வளரப்பெற்றும், புனல்காலே உண்டியாய் - நீரும் காற்றுமே உணவாக அமைய, வற்றி - மெலிந்து, யாரும் - அவருள் ஒருவரும், நின் மலர் அடி - உன் தாமரை மலர் போலுந்திருவடிகளை, காணா - காண முடியாத, மன்ன - அரசனே, என்னை - அடியேனை, ஓர் வார்த்தையுட்படுத்து - ஒரு சொல்லில் அகப்படுத்தி, பற்றினாய் - ஆட்கொண்டாய், அதை எண்ணி, பதையேன் - நெஞ்சம் துடிக்க மாட்டேன், மனம்மிக உருகேன் - மனமானது மிகவும் உருக மாட்டேன், பரிகிலேன் - உன்னிடம் அன்பு செய்யமாட்டேன், பரியா உடல் தன்னை - அன்பு செய்யாத உடம்பை, செற்றிலேன் - அழிக்கமாட்டேன், இன்னும் திரிதருகின்றேன் - இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

விளக்கம் : நீண்ட காலம் ஒரே இடத்திலிருந்து தவம் செய்தலால், தவத்தவர்மேல் புற்றும் மரமும் வளர்வதுண்டு ஆதலின், 'புற்றுமாய் மரமாய்' என்றார். ஒரு வார்த்தை என்பது, திருவைந்தெழுத்து. இவ்வுயர்ந்த உபதேசம் பெற்றும் வீடு பெறாது அலைவது மிக இழிவு என்பார், 'உடல்தன்னைச் செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன்' என்றார்.

இதனால், இறைவன் செய்யும் உபதேசத்தின் பெருமை கூறப்பட்டது.

2

புலைய னேனையும் பொருளென நினைந்துன்
அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையி னால்நடந் தேன்விடைப் பாகா
சங்க ராஎண்ணில் வானவர்க் கெல்லாம்