பக்கம் எண் :

திருவாசகம்
44


கூறினான். இவ்வரலாற்றை ஆகமங்கள் கூறுகின்றன. உமையம்மைக்கு இறைவன் ஆகமம் சொல்லிய வரலாற்றைத் திருமந்திரமும் திருத்தொண்டர் புராணமும் கூறுகின்றன. அந்தப் பழைய வரலாறுகளைக் கருத்தில் கொண்டே, "சொன்ன ஆகமம்" என்றார். படைப்புக் காலத்தில் சொல்லிய அந்த ஆகமங்களை, நிலவுலகத்தின் பொருட்டு மகேந்திர மலையில் இறைவன் வெளிப்படுத்தி யருளினான் என்பதை அடிகள் அருளிய இந்தப் பகுதியினாலே அறிகிறோம். மகேந்திரமலை, பொதியைக்குத் தெற்கே உள்ளது எனச் சிவதருமோத்தரமும் வால்மீகி ராமாயணமும் கூறும்.

கல்லா டத்துக் கலந்தினி தருளி
நல்லா ளோடு நயப்புற வெய்தியும்

பதப்பொருள் : கல்லாடத்து - கல்லாடம் என்னும் திருப்பதியில், இனிது - இனிதாக, நல்லாளோடு - உமாதேவியோடு, நயப்புற - யாவரும் விரும்பும்படி, கலந்தருளி - ஒருமித்து, எய்தியும் - எழுந்தருளியிருந்தும்

விளக்கம் : கல்லாடம் என்பது ஒரு சிவதலம். இங்கு நல்லாளோடு நயப்புற எய்திய வரலாறு அறியப்படவில்லை; அடுத்து வரும் இரு வரலாறுகளும் அவ்வாறு உள்ளனவே.

பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
எஞ்சா தீண்டு மின்னருள் விளைத்தும்

பதப்பொருள் : பஞ்சப் பள்ளியில் - பஞ்சப் பள்ளியென்னும் திருப்பதியில், பால் மொழிதன்னொடும் - பால் போன்ற மொழியையுடைய வளாகிய உமாதேவியோடும், எஞ்சாது - குறையாமல், ஈண்டும் - மிகும், இன் அருள் விளைத்தும் - இனிய அருள் செய்தும்.

15. கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்

பதப்பொருள் : கிராத வேடமொடு - வேடவுருவத்துடன், கிஞ்சுக வாயவள் - முருக்கம்பூப்போன்ற உதட்டையுடைய உமாதேவியின், விராவு - நெருங்கின, நல் - அழகான, கொங்கைத்தடம் படிந்தும் - தனங்களாகிய குளத்தில் மூழ்கியும்.

விளக்கம் : இவ்வேடவுருவத்தை அருச்சுனன் தவங்கிடந்த போது அவன்பொருட்டு மேற்கொண்டது எனக் கூறுவாரும் உளர். கிராதன் - வேடன், கிஞ்சுகம் - முள் முருக்கம்பூ. இது சிவப்பு நிறமுடையது.

கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்