விளக்கம் : இவ்வரலாறும் அறியப்படவில்லை. வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும் நூறுநூ றாயிரம் இயல்பின தாகி 25. ஏறுடை ஈசனிப் புவனியை உய்யக் கூறுடை மங்கையும் தானும்வந் தருளி பதப்பொருள் : வேறுவேறு உருவும் - வெவ்வேறு திருவுருவங்களும், வேறுவேறு இயற்கையும் - வெவ்வேறு குணங்களும், நூறு நூறு ஆயிரம் இயல்பினதாகி - நூறு இலட்சம் வகையினையுடையதாகி, ஏறு உடை ஈசன் - இடப வாகனத்தையுடைய சிவ பெருமான், இ புவனியை உய்ய - இவ்வுலகத்தை உய்விக்கும் பொருட்டு, கூறு உடை மங்கையும் - தனது இடப்பாகத்தையுடைய உமாதேவியும், தானும் - தானுமாய், வந்தருளி - எழுந்தருளி. விளக்கம் : இறைவன் அடியார்க்கு அருளும்பொருட்டுப் பல்வேறு வடிவங்கள் எடுக்கிறான் என்பதும், அவை யாவும் கருணையே வடிவமாம் என்பதும் விளங்குகின்றன. "மூன்றாம் நந்தம் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே" என்ற சிவஞானசித்தியார் திருவாக்கும் இதனையே உறுதிப்படுத்துகிறது. அவ்வண்ணம் அருளுவதும் இறைவியோடு கூடினபோதுதான் நன்கு வெளிப்படுகிறது என்பது, "ஈசன் இப்புவனியை உய்யக் கூறுபடை மங்கையும் தானும் வந்தருளி" என்பதனால் விளங்குகிறது. இறைவன் வேறு, திருவருள் வேறு என்பது இல்லை, இரண்டும் ஒன்றே என்பதைக் காட்டக் "கூறுடை மங்கையும் தானும்" என்றார். "உய்ய" என்னும் தன்வினை, பிறவினைப்பொருள் தந்து நின்றது. இறைவன் திருவிளையாடல்கள் நிகழ்ந்த முறை கூறப்பட்டது. குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் பதப்பொருள் : குடநாடு அதன்மிசை - மேல்நாட்டுக்கு, குதிரையைக் கொண்டு - குதிரைகளைக்கொண்டு, சதுர்பட - அழகு பொருந்த, சாத்தாய் - வாணிகக் கூட்டமாய், தான் எழுந்தருளியும் - தானே எழுந்தருளி வந்தும். விளக்கம் : குதிரையைக் கொண்டு சாத்தாய் எழுந்தருளியது : அடிகள், பாண்டியனிடம் குதிரை வாங்குவதற்காகப் பெற்று வந்த நிதி முழுமை யினையும் திருப்பெருந்துறையில் ஆலயத்திருப்பணிக்குச் செலவு செய்துவிட்டார். இதனையறிந்த பாண்டியன் கோபம் கொண்டு அடிகளைத் துன்புறுத்தவே, இறைவன் அடிகளுக்கு அருளும்பொருட்டுக் குதிரை வீரனாய்த் திருப்பெருந்துறையிலிருந்து மதுரை வந்தருளின வரலாறு
|