பக்கம் எண் :

திருவாசகம்
474


இதனால், இறைவனது திருவடி வியாபகத்தில் எப்போதும் அடங்கி நிற்றல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

8

தாதாய் மூவே ழுலகுக்குந் தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்
மேதா மணியே என்றென் றேத்தி இரவும் பகலும் எழிலார் பாதப்
பேதாய்ந் தணைவ தென்று கொல்லோ என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.

பதப்பொருள் : மூ ஏழு உலகுக்கும் - பழமையான ஏழு உலகங் களுக்கும், தாதாய் - தந்தையானவனே, தாயே - தாயானவனே, நாயேன்தனை ஆண்ட பேதாய் - நாய் போன்ற என்னை ஆட்கொண்ட பித்துடையவனே, பிறவிப் பிணிக்கு - பிறவி நோய்க்கு, ஓர் மருந்தே - ஒப்பற்ற மருந்து போன்றவனே, மேதா மணியே - பேரறிவானவனே, என்று என்று ஏத்தி - என்று பலகால் துதித்து, என் பொல்லா மணியை - என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தை, புணர்ந்து - சேர்ந்து, பெருந்தேன் பில்க - பேரின்பமாகிய மிக்க தேன் சிந்த, எப்போதும் இரவும் பகலும் - இடைவிடாது இரவும் பகலும், எழில் ஆர் - அழகு நிறைந்த, பாதப்போது - திருவடியாகிய தாமரை இதழ்களை, ஆய்ந்து அணைவது - ஆராய்ந்து சேர்வது, என்று கொல்லோ - எக்காலமோ!

விளக்கம் : சற்றும் தகுதியற்ற தம்மையும் ஆட்கொண்டமையால் இறைவனை, ‘பேதாய்’ என்றார். இது நிந்தாஸ்துதி. பேதைமை, அருளால் ஆயிற்று என்க. ‘பாதப் போது’ என்றதற்கேற்ப, ‘பெருந்தேன் பில்க’ என்றார். ஆய்ந்து என்பதும் அக்கருத்துப் பற்றியாம். திருவடி நினைவு மனத்தில் பேரின்பத்தினைத் தரும் என்க. ‘சித்தத்துள் தித்திக்குந் தேனே’ என்றதையும் நினைவு கொள்க.

இதனால், இறைவன் திருவடி, பேரின்பத்தினை நல்கும் என்பது கூறப்பட்டது.

9

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனை ஆண்ட
பார்ப்பா னேஎம் பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போ தணைவ தென்று கொல்லோ என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.

பதப்பொருள் : முழுதும் - எல்லா உலகத்தையும், காப்பாய் - காப்பவனே, படைப்பாய் - படைப்பவனே, கரப்பாய் - ஒடுக்குபவனே, கண் ஆர் - பெருமை நிறைந்த, விசும்பின் - விண்ணுலகிலுள்ள, விண்ணோர்க்கு எல்லாம் - தேவர்களுக்கெல்லாம், மூப்பாய் - மூத்திருப்பவனே, மூவா முதலாய் நின்ற - முதுமை