பக்கம் எண் :

திருவாசகம்
475


எய்தாத இளையோனாய் நின்ற, முதல்வா - முதல்வனே, முன்னே எனை ஆண்ட - முன்னே என்னையாட் கொண்டருளின, பார்ப்பானே - அந்தணனே, எம் பரமா - எம்முடைய மேலோனே, என்று பாடிப்பாடி - என்று பலகால் பாடி, பணிந்து - வணங்கி, என் பொல்லா மணியை - என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தை, புணர்ந்து - சேர்ந்து, பூப்போது அணைவது - பொலிவினையுடைய தாமரை மலரை அணுகப்பெறுவது, என்று கொல்லோ - எந்நாளோ!

விளக்கம் : ‘கண் ஆர்’ என்றதற்கு ‘இடம் நிறைந்த’ என்ற பொருளுங் கொள்ளலாம். ‘மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா’ என்றது, முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையனாய் நிற்கும் பெற்றியைக் குறித்தது. ‘பார்ப்பானே’ என்றது, தம்மை அந்தணனாய் வந்து ஆட்கொண்ட கோலத்தை நினைவுகொண்டு என்க.

இதனால், இறைவனது திருவடி இன்பத்தினைப் பெற விரும்ப வேண்டும் என்பது கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்