28. வாழாப்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) இது திருவடிப் பேற்றினை விரும்பி, உலக வாழ்வை வெறுத்துப் பாடிய பதிகம். பற்றற்றான் பற்று இன்பம் தரும் என்றும், உலகப் பற்று துன்பம் தருவது என்றும் உணர்ந்த உண்மை உணர்வினால் இஃது எழுந்தது என்க. முத்தி உபாயம் உலகப் பற்று அறுதலே முத்தியடைதற்குரிய வழியாதலின், இது முத்தியுபாயம் எனப்பட்டது. மெய்ச்சார்பு உணர்தலால் பொய்ச்சார்பு கெடும் என்க. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே. பதப்பொருள் : பாரொடு விண்ணாய்ப் பரந்த - மண்முதல் விண் ஈறாகக் கலந்து விளங்கும், எம் பரனே - எமது மேலோனே; சீரொடு பொலிவாய் - சிறப்போடு விளங்குகின்றவனே, சிவபுரத்து அரசே - சிலலோக நாதனே, திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் வாழ்கின்ற சிவபெருமானே, ஆண்ட நீ என்னை ஆண்டருளின நீயே, அருளிலையானால் - அருள் செய்யவில்லையென்றால், யாரொடு நோகேன் - நான் யாரோடு நொந்துகொள்வேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன் - யாரிடம் இதனை எடுத்துச் சொல்லுவேன்? நான் மற்றுப் பற்று இலேன் - நான் வேறு பற்றுக்கோடு இல்லேன்; வார்கடல் உலகில் - நெடிய கடல் சூழ்ந்த இவ்வையகத்தில், வாழ்கிலேன் - வாழ ஒருப்படேன்; வருக என்று - வருவாய் என்று அழைத்து, அருள் புரியாய் - அருள் செய்வாயாக! விளக்கம் : ஆதரவற்ற போது உள்ள மனநிலையை, ‘யாரொடு நோகேன், ஆர்க்கெடுத் துரைக்கேன்’ என்பதனால் விளக்கினார். உலகச் சார்பினால் வரும் துன்பத்தை வெறுப்பார், ‘வார்கடல்
|