பக்கம் எண் :

திருவாசகம்
477


உலகில் வாழ்கிலேன் கண்டாய்’ என்றார். அத்துன்பத்தினின்றும் விடுதலை விரும்புவார், ‘வருக என்று அருள்புரியாயே’ என்றார்.

இதனால், இறைவன் ஒருவனே துன்பத்தை நீக்குபவன் என்பது கூறப்பட்டது.

1

வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந் துலகம்ஊ டுருவுஞ்
செம்பெரு மானே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே
எம்பெரு மானே என்னைஆள் வானே என்னைநீ கூவிக்கொண் டருளே.

பதப்பொருள் : வம்பனேன் தன்னை - வீணனாகிய என்னை, ஆண்ட - ஆட்கொண்டருளின, மாமணியே - பெருமையுடைய மாணிக்கமே, உம்பரும் அறியா ஒருவனே - தேவரும் அறிய முடியாத ஒப்பற்றவனே, இருவர்க்கும் - திருமால் பிரமனாகிய இருவருக்கும், உணர்வு இறந்து - உணர்ச்சியைக் கடந்து, உலகம் ஊடுருவும் - எல்லா உலகங்களிலும் ஊடுருவிச் சென்ற, செம்பெருமானே - செம்மேனி அம்மானே, சிவபுரத்து அரசே - சிவலோக நாதனே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, எம்பெருமானே - எமது தலைவனே, என்னை ஆள்வானே - என்னை ஆளாகவுடையானே, நான் மற்றப் பற்று இலேன் - யான் வேறு பற்றுக்கோடு இல்லேன், என்னை - அடியேனை, நீ கூவிக்கொண்டு அருள் - நீ அழைத்துக்கொண்டு அருள் புரிவாயாக!

விளக்கம் : எல்லார்க்கும் பொதுவான தலைவனாதலின், ‘எம்பெருமானே’ என்றும், தமக்குச் சிறப்பாக ஆண்டானாதலின், ‘என்னை ஆள்வானே’ என்றும் கூறினார். ஆட்கொண்ட பின்னர் உலகப் பற்றுகள் நீங்கினமையின், என்னை அழைத்துக்கொள்ள வேண்டும் என்பார், ‘என்னை நீ கூவிக்கொண்டருளே’ என்றார்.

இதனால், இறைவனது அருளே உண்மைச் சார்பினை அடைவிக்கும் என்பது கூறப்பட்டது.

2

பாடிமால் புகழும் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே
ஊடுவ துன்னோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக் குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே.

பதப்பொருள் : சிவபுரத்து அரசே - சிவலோக நாதனே, திருப்பெருந் துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில்