பக்கம் எண் :

திருவாசகம்
485


உலகத்தோடு தொடர்பு கொண்டு வரும் நிலையையும், ‘விளக்கு’ என்பது அவன் ஒவ்வோர் உயிருக்கும் தனித்தனியே அருள் செய்யும் நிலையையும் குறிப்பனவாம். ‘அதெந்து’ என்றது மலையாளச் சொல். அறிவினால் அளக்கவொண்ணாதவன் அன்பு வலையிற் படுவோன் என்க.

இதனால், இறைவனைச் செருக்குடையவர் அறிய முடியாது என்பது கூறப்பட்டது.

1

நிருத்தனே நிமலா நீற்றனே நெந்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையிற்
செழுமலர் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பதப்பொருள் : நிருத்தனே - கூத்தப்பெருமானே, நிமலா - மலமில்லாதவனே, நீற்றனே - திருவெண்ணீற்றையுடையானே, நெற்றிக் கண்ணனே - நெற்றிக்கண்ணையுடையானே, விண்ணுளோர் பிரானே - தேவர் பிரானே, ஒருத்தனே - ஒப்பற்றவனே, ஓலமிட்டு அலறி - முறையிட்டு அரற்றி, உலகெலாம் தேடியும் - உலக முழுதும் தேடியும், உன்னைக் காணேன் - உன்னை நான் பார்க்கவில்லை, திருத்தம் ஆம் பொய்கை - தீர்த்தமாகிய பொய்கையையுடைய, திருப்பெருந்துறையில் - திருப்பெருந்துறை யின்கண், செழுமலர் - வளப்பமான மலர்களையுடைய, குருந்தம் மேவிய - குருந்தமர நிழலில் பொருந்திய, சீர் அருத்தனே - சிறப்புடைய செல்வனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - தொண்டனாகிய யான் அன்புடன் அழைத்தால், அதெந்துவே என்று அருளாய் - அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக.

விளக்கம் : இறைவன் மாயைக்கு அப்பாற்பட்டவன். உலகம் மாயைக்குட்பட்டது. மாயைக்கு அப்பாற்பட்ட பெருமானை மாயைக்குட்பட்ட உலகில் காண முடியாதாதலின், ‘உலகெலாந் தேடியுங் காணேன்’ என்றார். ஆனால், அன்போடு அழைத்தால் அகப்படுவான் என்பது, ‘ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றருளாயே’ என்பதனால் கிடைக்கிறது. ‘திருத்தமாம் பொய்கை’ என்பது திருப்பெருந்துறைக் கோயிலில் உள்ள தீர்த்தத்திற்குப் பெயராய் வழங்குகின்றது.

இதனால், இறைவன் மாயைக்கு அப்பாற்பட்டவன் என்பது கூறப்பட்டது.

2