குருந்த மர நிழலைப் பொருந்திய, சீர் இருந்தவாறு எண்ணி - சிறப்பு இருந்த முறையை ஆராய்ந்து, ஏசறா நினைந்திட்டு - வருந்தி நினைந்து, என்னுடை எம்பிரான் - என்றென்று நினைந்து - என்னுடைய எம் பெருமான் என்று பலகாலும் நினைந்து, ஆதரித்து அழைத்தால் - அன்போடு அழைத்தால், அலைகடல் அதன் உள்ளே நின்று - அலைகடல் நடுவில் உள்ள உலகத்தினின்றும், பொருந்த வா - என்னையடைய வருவாயாக, கயிலை புகும் நெறி இது - எனது கயிலாயத்தைச் சேரும் வழி இதுதான், போதராய் - வருவாயாக, என்று அருளாய் - என்று சொல்லி அருள் புரிவாயாக! விளக்கம் : ‘சீர் இருந்தவாறு எண்ணி’ என்றது, குருந்த மரத்தின் கீழ் குருவாய் எழுந்தருளிய காட்சியை எண்ணி என்பதாம். அக்குருமூர்த்தியை அடைய வேண்டி வருந்துதல் ஏசறா நினைத்தலாம். அப்பேற்றைத் தருதற் பொருட்டு இறைவனை இடைவிடாது வேண்டுதல், எம்பிரான் என்றென்று நினைத்தலாம். திண்ணமாக எண்ணி அன்போடு அழைத்தால் இறைவன் வீட்டுநெறியருளுவான் என்பதாம். அலைகடல் என்பதைப் பிறவிக்கடல் என்று கொள்ளலும் ஒன்று. இதனால், இறைவனே உயிர்களை அழைத்து அணைத்து அருள வல்லவன் என்பது கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|