30. திருக்கழுக்குன்றப் பதிகம் (திருக்கழுக்குன்றத்தில் அருளியது) இதனாலேயே இப்பெயர் பெற்றது இப்பதிகம். இரண்டாவதாக அடிகள் அருள் பெற்ற இடம் இதுவாகும். குரு தரிசனம் அஃதாவது, அடிகள், இறைவன் தமக்கு அருள் புரிந்த ஞானாசிரியன் கோலத்தைக் கண்ட காட்சியின் சிறப்பைக் கூறியது. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு மான்உன் நாமங்கள் பேசுவார்க் கிணக்கி லாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கி லாததோர் வித்து மேல்விளை யாமல் என்வினை ஒத்தபின் கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. பதப்பொருள் : பிணக்கு இலாத - மாறுபாடு இல்லாத, பெருந்துறைப் பெருமான் - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே, உனக்கு இலாதது - உலர்த்துதல் இல்லாததாகிய, ஓர் வித்து - ஒரு விதையின் தன்மையை அடைந்த எனது செயல்கள், மேல் விளையாமல் - மேலும் ஆகாமியமாய் விளையாதபடி, என் வினை ஒத்தபின்- எனது வினை நுகர்ச்சிகள் இரண்டும் ஒரு தன்மையவாய் எனக்குத் தோன்றிய பின்பு, துன்பமே துடைத்த எம்பிரான் - ஞானத்தை அருளி எனது பிறவித் துன்பத்தை நீக்கிய எங்கள் தலைவனே, உன் நாமங்கள் பேசுவார்க்கு - உன்னுடைய திருநாமங்களையே எப்பொழுதும் சொல்லுவோர்க்கு, இணக்கு இலாதது - நிகர் இல்லாததாகிய, ஓர் இன்பமே வரும் - ஒப்பற்ற பேரின்பமே உண்டாகும். ஆதலால், நீ கழுக்குன்றிலே வந்து - நீ திருக்கழுக்குன்றத்திலே வந்து, கணக்கிலாத் திருக்கோலம் காட்டினாய் - அளவில்லாத ஆசாரியத் திருக்கோலத்தை மீளவும் எனக்குக் காட்டினாய். விளக்கம் : இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் என்பவை நிகழ்வதற்கு முன்பு இறைவன் குருவாய் வந்து ஞானத்தை அருளுதல் இல்லையாகலாலும். அடிகளுக்கு இறைவன் முன்பே திருப்பெருந்துறையில் ஞானாசிரியனாய் வந்து ஞானத்தை
|