பக்கம் எண் :

திருவாசகம்
494


அருளினமை நன்கறியப்பட்டதாலும், இத்திருப்பாடலில் உள்ள சொற்களை இவ்வாறு கொண்டு கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது.

உலர்த்திப் பக்குவப்படுத்தப்படாத விதை முளைத்தல் இல்லை; அது போல, ஞானிகளது செயல், மேல் பிறவியைத் தருவது இல்லை. இங்கு ‘விதை’ என்றது உவமையாகுபெயராய், அது போன்ற செயலைக் குறித்தது. ‘வினை’ என்றது பிராரத்த வினையின் அநுபவத்தை. நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும் தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் இன்றி இரண்டையும் ஒரு தன்மையவாக ஏற்று அநுபவித்தலே, ‘இருவினையொப்பு’ எனப்படுகின்றது. ‘துடைத்த’ என்பதில் அகர ஈறு தொகுத்தல்.

இதனால், இறைவன் திருநாமத்தைச் சொல்லுபவர்க்குத் துன்பம் இல்லை என்பது கூறப்பட்டது.

1

பிட்டு நேர்பட மண்சு மந்தபெ ருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாதச ழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து காட்டி னாய்க்கழுக் குன்றிலே.

பதப்பொருள் : பிட்டு நேர்பட - பிட்டினைப் பெற, மண் சுமந்த - மண்ணைச் சுமந்த, பெருந்துறைப் பெரும்பித்தனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெரிய பித்தனே, சிட்டனே - பெரியோனே, சிவலோகனே - சிவபுரத்தையுடையவனே, சட்டம் நேர்பட வந்திலாத - உன்னைச் செம்மை யாகப் பொருந்த வந்திலாத, சழக்கனேன் - அறியாமையையுடைய யான், உனைச் சார்ந்திலேன் - உன்னையடைந்திலேன்; சிறு நாயினும் கடையாய - அற்பமான நாயைக்காட்டிலும் தாழ்மையான, வெம் - கொடிய, கட்டனேனையும் - துன்பத்தையுடைய என்னையும், ஆட்கொள்வான் - அடிமைகொண்டருள, கழுக்குன்றிலே வந்து - திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, காட்டினாய் - உன் திருக்கோலத்தைக் காட்டியருளினாய்.

விளக்கம் : மெய்ச்சார்பை உணர்ந்து பொய்ச்சார்பு கெட ஒழுகுதல் அறிவு. அவ்வறிவு இன்மையால் தம்மை, ‘சழக்கனேன்’ என இழித்துக் கூறிக்கொண்டார். எனினும், அறிவு ஒன்றுமில்லாத மதுரைப் பிட்டு வாணிச்சியின் துன்பத்தைப் போக்கி மெய்ச்சார்பினை நல்கிய பெருமானாதலின், மயக்கும் துன்பத்தைப் போக்கி மெய்ச்சார்பை நல்கினான் என்பதாம்.

இதனால், இறைவனது எளிவந்த கருணை கூறப்பட்டது.

2