உபதேசமாகிய, பெருந்தோணி பற்றி - பெரிய மரக்கலத்தைப் பற்றிக்கொண்டு, உகைத்தலும் - செலுத்தலும், காண் ஒணா - யாவராலும் காணுதற்கு அருமையான, திருக்கோலம் - உனது திருவடிவத்தை, நீ கழுக்குன்றிலே வந்து - இறைவனே நீ திருக்கழுக்குன்றத்திலே வந்து, காட்டினாய் - எனக்குக் காட்டியருளினாய். விளக்கம் : ‘நாணொ ணாததொர் நாணம்’ என்றது, மிகப்பெரிய நாணம் என்றபடி, அது, பெருந்துறையில் அடியாரெல்லாம் இறைவனோடு உடன் சென்றும், தாம் உடன் செல்லாது வினைவயத்தால் பின்தங்கியதை எண்ணியடைந்த வெட்கமாம். பிறவியாகிய கடலைக் கடப்பதற்கு இறைவன் திருப்பெருந்துறையில் வந்து செய்தருளிய உபதேசமொழி தோணியாயிற்று என்றபடி. ‘அஞ்செழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை’ என்று முன்னர் அருளி இருப்பதையும் நோக்குக. இதனால், குருவின் உபதேச மொழியே பிறவியை நீக்க வல்லது என்பது கூறப்பட்டது. 4 கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருந்துறைக் கொண்டலே சீல மேதும் அறிந்தி லாதஎன் சிந்தை வைத்தசி காமணி ஞால மேகரி யாக நான்உனை நச்சி நச்சிட வந்திடுங் கால மேஉனை ஓத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. பதப்பொருள் : கோலம் மேனி வராகமே - அழகிய திருமேனி பன்றியாகியவனே, குணம் ஆம் - இறைமைக்குணங்களாகிய, பெருந்துறைக் கொண்டலே - திருப்பெருந்துறையிலுள்ள மேகம் போன்றவனே, சீலம் ஏதும் அறிந்திலாத - நல்லொழுக்கம் சிறிதும் உணர்ந்திலாத, என் சிந்தை வைத்த - என் மனத்தே வைக்கப்பட்ட, சிகாமணி - முடிமணி போன்றவனே, ஞாலமே கரி ஆக - உலகமே சாட்சியாக, நான் உன்னை நச்சி நச்சிட - நான் உன்னை இடைவிடாது விரும்ப, வந்திடும் காலமே - வந்து அருளிய காலதத்துவமாயுள்ளவனே, உனை ஓத - உன்னை நான் புகழ்ந்து பாடும்படி, நீ கழுக்குன்றிலே வந்து - நீ திருக்கழுக்குன்றத்திலே வந்து, காட்டினாய் - உன் திருக்கோலத்தைக் காட்டியருளினாய். விளக்கம் : அடிகளை இறைவன் திருப்பெருந்துறையில் ஞான குருவாய் வந்து ஆட்கொண்டது பலரும் அறிய நிகழ்ந்ததாகலின், ‘ஞாலமே கரியாக நான் உனை நச்சிட’ என்றார். அங்ஙனம் ஆட்கொண்ட பின்பு தாம் இறைவனையே இடைவிடாது விரும்புகின்ற நிலையை ‘நச்சி நச்சிட’ என்றார். இதனால், இறைவன் தன் அடியார்களை உலகம் அறிய வந்து ஆட்கொள்வான் என்பது கூறப்பட்டது. 5
|