பக்கம் எண் :

திருவாசகம்
499


31, கண்ட பத்து
(தில்லையில் அருளியது)

தில்லையம்பலத்தில் நடராசப்பெருமானது ஆட்டத்தைக் கண்டு வியந்து பாடிய பகுதி கண்ட பத்தாம். திருப்பெருந்துறையிலே கண்ட பெருமானைத் திருக்கழுக்குன்றிலே மீண்டும் கண்டு, அவனது அருட்கூத்தைத் தில்லையம்பதியிலே கண்டார் என்க.

நிருத்த தரிசனம்

திருக்கூத்தைக் காண்டல்

கொச்சகக் கலிப்பா

திருச்சிற்றம்பலம்

இந்திரிய வயம்மயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள்தில்லை கண்டேனே.

பதப்பொருள் : இந்திரிய வயம் - பொறிகளின் வயப்பட்டு, மயங்கி - மயக்கமடைந்து, இறப்பதற்கே காரணமாய் - அழிவதற்கே காரணமாகி, அந்தரமே திரிந்து - பல புவனங்களிலும் அலைந்து, போய் - சென்று, அருநரகில் வீழ்வேற்கு - கடத்தற்கருமையான நரகத்தில் வீழ்வேனாகிய எனக்கு, சிந்தைதனைத் தெளிவித்து - மனத்தைத், தூய்மையாக்கி, சிவம் ஆக்கி - சிவத்தன்மையை வெளிப்படுத்தி, எனை ஆண்ட - என்னை ஆண்டருளின, அந்தம் இலா ஆனந்தம் - முடிவில்லாத ஆனந்த மூர்த்தியை, அணிகொள் தில்லை கண்டேன் - அழகிய தில்லையம்பலத்தில் கண்டேன்.

விளக்கம் : இந்திரிய வயப்பட்டு அழிந்து போகிற தமக்கு, உண்மை நிலையை உணர்த்தி அழியாமற்காத்து ஆனந்தம் அளித்தான் பெருமான் என்றார்.

'ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்திவிட்டன்னிய மின்மையி னரன் கழல் செலுமே' என்ற சிவஞான போதத்தின்படி, வேடர்களின் நடுவே வளர்ந்த அரசகுமாரனுக்கு உண்மை உணர்த்தி அரண் மனைக்கு மீட்டுச் செல்லும் மன்னனைப் போன்று, இறைவன் அடிகளுக்கு உண்மையை உணர்த்த ஐம்புலன்களினின்றும் மீட்டு வீடுபேறு அளித்தருளினான் என்பதாம். தில்லையிலே கண்டது இறைவனது ஆட்டத்தை என்க.