பக்கம் எண் :

திருவாசகம்
500


இதனால், இறைவன் ஆனந்த மயமானவன் என்பது கூறப்பட்டது.

1

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடக்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே.

பதப்பொருள் : வினைப்பிறவி என்கின்ற - வினையினால் உண்டாகிய பிறவியாகிய, வேதனையில் அகப்பட்டு - துன்பத்தில் சிக்கி, தனைச் சிறிதும் நினையாதே - இறைவனாகிய தன்னைச் சற்றும் நினையாமலே, தளர்வு எய்திக் கிடப்பேனை - மெலிவடைந்திருக்கும் என்னை, எனைப் பெரிதும் ஆட்கொண்டு - மிகப் பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த - எனது பிறவித் தளையை நீக்கின, இணையிலியை - ஒப்பிலாப் பெருமானை, அனைத்து உலகும் தொழும் - எல்லா உலகங்களும் வணங்குகின்ற, தில்லை அம்பலத்தே கண்டேன் - தில்லையம்பலத்தில் கண்டேன்.

விளக்கம் : பிறப்பு வினையினால் வருவது. வினையை அடிகளுக்கு இறைவன் குருவாய் வந்து நீக்கியருளினான். வினை உள்ள காலத்தில் இறைவனை அறியும் அறிவு இல்லை. வினை நீங்கிய காலத்து அவனை அறியும் அறிவு விளங்கிற்று. இத்தகைய திருவருளைச் செய்தவன் ஒப்பற்றவனாகிய இறைவன் என்பதை இத்திருப்பாடலால் அடிகள் குறித்தருளினார்.

இதனால், இறைவன் ஒப்பு உயர்வற்றவன் என்பது கூறப்பட்டது.

2

உருதெரியாக் காலத்தே உள்புகுந்தென் னுளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே.

பதப்பொருள் : உருத்தெரியாக் காலத்தே - என்னுடைய உருவம் தோற்றப்பெறாத காலத்திலே, உள் புகுந்து - என் உள்ளே புகுந்து, என் உளம் மன்னி - என் மனத்தில் நிலைபெற்று, கருத்து இருத்தி - ஞானத்தைப் பதியச் செய்து, ஊன் புக்கு- உடம்பிற்புகுந்து, கருணையினால் ஆண்டுகொண்ட - தன் பெருங்கருணையினால் ஆட்கொண்டருளின, திருத்துருத்தி மேயானை - திருத்துருத்தி என்ற தலத்திலே எழுந்தருளியவனை, தித்திக்கும் சிவபதத்தை - இன்பமயமான சிவநிலையை, அருத்தியினால் - ஆசையினால், நாயடியேன் - நாய் போன்ற நான், அணி கொள் தில்லை கண்டேன் - அழகு பொருந்திய தில்லையம்பலத்தில் கண்டேன்.

விளக்கம் : உருத்தெரியாக் காலமாவது, கருவிலேயிருக்கும் காலம் என்பதாம். 'உளம் மன்னி ஊன் புக்கு' என்றது, உள்ளம்