பக்கம் எண் :

திருவாசகம்
501


உடல் இரண்டிலும் கலந்து என்பதாம். இவ்வாறு அடிகள் போல, பிறக்கும் பொழுதே நல்லுணர்வோடு பிறக்கின்றவர்களைக் 'கருவிலே திருவுடையவர்' எனக் கூறுவார்கள். 'கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு உருகிற்றென் உள்ளமும்' என்ற திருநாவுக்கரசர் வாக்கையும் காண்க. இறைவன் எஞ்ஞான்றும் உடனாய் இருந்து உதவுகிறான் என்பதாம்.

இதனால், இறைவன் கருணையே உருவானவன் என்பது கூறப்பட்டது.

3

கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து வனப்பெய்தி இருக்கும்வண்ணம்
பல்லோருங் காணஎன்றன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே.

பதப்பொருள் : கல்லாத புல் அறிவின் - கல்லாத அற்ப அறிவினால், கடைப்பட்ட நாயேனை - கடையவனாகிய நாய் போன்றவனை, வல்லாளனாய் வந்து - எல்லாம் வல்லவனாய் வந்து, வனப்பு எய்தி இருக்கும் வண்ணம் - திருவருள் பெற்றிருக்கும்படி, பல்லோரும் காண - பலரும் காண, என்றன் - என்னுடைய, பசுபாசம் அறுத்தானை - ஆன்ம அறிவைப் பற்றிள்ள மும்மலக்கட்டினையும் போக்கினவனை, எல்லோரும் இறைஞ்சு - எல்லோரும் வந்து வணங்குகின்ற, தில்லையம்பலத்தே கண்டேன் - தில்லையம்பலத்தில் கண்டேன்.

விளக்கம் : 'வல்லாளனாய் வந்து' என்றது, கல்லாத புல்லறிவையும் திருத்த வல்லவனாய் என்றதாம். வனப்பு எய்தலாவது, திருவருள் பெறுதல். சீவபோதம் சிவபோதமாதல் என்பதாம். 'பல்லோர் என்றது, அடியார் கூட்டத்தை என்றும், 'எல்லோர்' என்றது, தேவர் முனிவர் முதலியோரை என்றும் கொள்க. அறிவற்ற தம்மை அறிவுடையவனாக்கியருளினான் இறைவன் என்பதாம்.

இதனால், இறைவன் பாசத்தைப் போக்கியருள வல்லவன் என்பது கூறப்பட்டது.

4

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதிமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யான்எனதென் னுரைமாய்த்துக்
கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே.

பதப்பொருள் : சாதி குலம் பிறப்பு என்னும் - சாதி குலம் பிறவி என்கின்ற, சுழிப்பட்டு - சுழலிலே அகப்பட்டு, தடுமாறும் - அறிவு கலங்குகின்ற, ஆதம் இலி நாயேனை - அன்பில்லாத நாய் போன்ற எனது, அல்லல் அறுத்து - துன்பத்தினைக் களைந்து, ஆட்கொண்டு - அடிமை கொண்டு, பேதை குணம் - அறியாமைக் குணத்தையும்,