பிறர் உருவம் - அன்னியருடைய வடிவம் என்ற எண்ணத்தையும், யான் எனது என் உரை - நான் எனது என்று சொல்லும் வார்த்தைகளையும், மாய்த்து - அறவே ஒழித்து, கோது இல் - குற்றம் இல்லாத, அமுது ஆனானை - அமுதமானவனை, குலாவு - விளங்குகின்ற, தில்லை கண்டேன் - தில்லையம்பலத்தில் கண்டேன். விளக்கம் : சாதி, நால்வகை வருணம், குலம், வருணத்தின் உட்பிரிவுகள். குடி அல்லது 'கோத்திரம'் என்பதும் இதுவே. பிறப்ப என்பது, மக்கட்பிறவியுடன் ஏனைய எல்லாப் பிறவிகளையும் குறித்தது. சுழலில் அகப்பட்டவர் வெளியில் வரமுடியாது தடுமாறுதல் போல, சாதி முதலிய வேறுபாட்டுணர்ச்சியில் அகப்பட்டவரும் வெளியே வர முடியாது என்பார், 'சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்' என்றார். 'பிறருருவம்' என்றல், சில செயல்களுக்குப் பிறரைக் காரணமாக நினைத்தல். 'யான் எனதென்றல்' சில செயல்களுக்கு நம்மைக் காரணமாக நினைத்தல். இவை இரண்டும் அறியாமையால் உண்டாவன. இவ்வறியாமை நீங்கிய பின் அனுபவ நிலையில் இறைவன் இன்பப் பொருளாய் விளங்குதலால், 'கோதில் அமுதானானை' என்றார். சீவ போதத்திலே கிடந்து தடுமாறுகின்ற தமக்குச் சிவபோதத்தை நல்கி ஆட்கொண்டான் என்பதாம். இதனால், இறைவன் அமுத மயமாய் உள்ளவன் என்பது கூறப்பட்டது. 5 பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும் உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. பதப்பொருள் : பிறவி தனை - பிறவியை, அறமாற்றி - முற்றிலும் நீக்கி, பிணிமூப்பு என்ற இவை இரண்டும் - நோயும் முதுமையும் ஆகிய இவை இரண்டையும், உறவினொடும் ஒழிய - சுற்றமாகிய பற்றோடுங் கூட நீங்க, சென்று - போய், உலகு உடைய ஒரு முதலை - உலகத்தையுடைய ஒப்பற்ற முதல்வனை, செறி பொழில் சூழ் - நெருங்கிய சோலை சூழ்ந்த, தில்லை நகர் - தில்லையம்பதியில், திருச்சிற்றம்பலம் மன்னி - திருச்சிற்றம் பலத்தை அடைந்து, மறையவரும் - அந்தணரும், வானவரும் - தேவரும், வணங்கிட - தொழுதிட, நான் கண்டேன் - நான் கண்டேன். விளக்கம் : அடிகளுக்கு இனி வரும் பிறப்பு ஏதும் இல்லாமற்செய்தமையைப் 'பிறவிதனை அறமாற்றி' என்றும். இப்பிறப்பில் துன்பம் யாதும் இல்லாதவாறு அருள் செய்தமையை, 'பிணிமூப்பென்றிவை இரண்டும் ஒழிய' என்றும், நல்லுடல் முதலியவற்றுடன் உலக வாழ்க்கையில் உழலாமல், இறைவனது
|