கெட்டவனாகிய நான் மட்டும், வாடிவாடி - வாட்டமுற்று வாட்டமுற்று, வற்றல் மரம்போல் நிற்பேனோ - பட்ட மரத்தைப் போன்று இருப்பேனோ, ஊடி ஊடி - பிணங்கிப் பிணங்கி, உடையாயொடு - உடையவனாகிய உன்னுடன், கலந்து - சேர்ந்து, உள் உருகி - மனமுருகி, பெருகி - பூரித்து, நெக்கு - நெகிழ்ந்து, ஆடி ஆடி - கூத்தாடிக்கூத்தாடி, ஆனந்தம் அதுவேயாக - ஆனந்த மயமாகும்படி, கலந்து அருள் - ஒன்றாய்க் கலந்து அருள் செய்வாயாக. விளக்கம் : கூத்தாடுதலும், நகைத்தலும், உள்ளங்களித்தலும் இறைவனைக் கூடியதால் உண்டானவை. 'பட்ட மரம் இலை உதிர்ந்து வாடியிருப்பது போன்று ஒளி குன்றி வாடியிருக்கின்றேன்' என்பார், 'வற்றல் மரம்போல் நிற்பேனோ' என்றார். ஊடுதல், காதலை மிகுதிப்படுத்துமாதலின், 'ஊடி ஊடி உடையாயொடு கலந்து' என்றார். அடியார்கள் போன்று அன்பினைப் பெற்று இறைவனைக் கூடி ஆனந்தமாயிருக்க வேண்டும் என்று வேண்டியபடி. இதனால், இறைவன் அடியார்களது இயல்பு கூறப்பட்டது. 11 திருச்சிற்றம்பலம்
|