33. குழைத்த பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) குழைத்தலாவது, வாடச் செய்தல் எனப் பொருள்படும். அடிகளை இறைவன் உலகத்தில் இருந்து வாடச் செய்தமையை எடுத்துக் கூறிய பதிகமாதலால், குழைத்த பத்து எனப் பெயர் பெற்றது. இது 'குழைத்தால்' என்று தொடங்கிக் 'குழைத்தாய்' என்றே முடிந்திருத்தலும் அறியத்தக்கது. துன்பத்தினின்றும் மீட்க வேண்டும் என்பது பதிகக் கருத்தாம். ஆத்தும நிவேதனம் ஆத்தும நிவேதனமாவது, ஆன்மாவை இறைவனுக்கு அர்ப்பணித்தலாம். அஃதாவது, திருவருட்செயலுக்குத் தம்மை ஒப்புவித்துவிடுதல். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் கொடுவினையேன் உழைத்தால் உறுதி யுண்டோதான் உமையாள் கணவா எனையாள்வாய் பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோவென் றழைத்தால் அருளா தொழிவதே அம்மா னேஉன் னடியேற்கே. பதப்பொருள் : உடையாய் - உடையவனே, உடையாள் கணவா - உமையம்மையின் தலைவனே, எனை ஆள்வாய் - என்னை ஆள்பவனே, பிறை சேர் சடையாய் - பிறை தங்கிய சடையையுடையவனே, அம்மானே - தலைவனே, பண்டை - பழைய, கொடுவினை நோய் - கொடிய வினையாகிய நோய், குழைத்தால் - என்னை வாட்டினால், காவாய் - நீ காத்தருளவில்லை; ஆதலால், கொடுவினையேன் உழைத்தால் - கொடுமையான வினையையுடையேன் நானாக முயன்றால், உறுதி உண்டோ - நன்மை உண்டாகுமோ? பிழைத்தால் - நான் பிழை செய்தால், பொறுக்க வேண்டாவோ - அதனை மன்னித்துக் காக்க வேண்டாவோ? முறையோ என்று அழைத்தால் - முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தால், உன் அடியேற்கு - உன் அடியானாகிய எனக்கு, அருளாது ஒழிவதே - அருள் செய்யாது போவது தகுதியோ? விளக்கம் : இறைவன் அருளாலன்றித் தம் முயற்சியால் மட்டும் உறுதிப்பயன் கிட்டாது என்பார், 'காவாய், வினையேன் உழைத்தா
|