லுறுதி யுண்டோதான்' என்றார். அதற்கு இறைவன் அருளும் வேண்டும் என்றபடி, அங்ஙனம் அருளாதொழிவது தகுதியன்று என்று முறையிடுவார் "முறையோ" என்றும், அடியவர் முறையீட்டைக் கேளாது ஒழிவது தகுதியன்று என்பார், 'அருளாதொழிவதே' என்றும் கூறினார். இதனால், பிழை பொறுத்து அருள்பவன் இறைவன் என்பது கூறப்பட்டது. 1 அடியேன் அல்லல் எல்லாம்முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறாஎங் கோவே ஆவா என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே? பதப்பொருள் : கொடி ஏர் இடையாள் கூறா - கொடி போன்ற இடையையுடைய உமையம்மையின் பாகனே, எம் கோவே - எங்கள் தலைவனே, எங்கள் சிவலோகா - எங்கள் சிவலோகநாதனே, உடையாய் - உடையவனே, அடியேன் - அடியேனது, அல்லல் எல்லாம் அகல - துன்பங்கள் எல்லாம் நீங்கும்படி, முன் ஆண்டாய் - முன்னே வந்து ஆண்டருளினை, என்று இருந்தேன் - என்று எண்ணி மகிழ்ந்து இருந்தேன்; அங்ஙனம் இருக்க, ஆவா என்று அருளி - ஐயோ என்று மனம் இரங்கி, செடி சேர் உடலை - துன்பத்தைத் தருகின்ற உடம்பை, சிதையாதது எத்துக்கு - அழித்து இன்பத்தைத் தாராது இருத்தல் ஏன்? கூவிப் பணி கொள்ளாது - விரைவில் அழைத்து உன் பணியில் நிற்கச் செய்யாது, ஒறுத்தால் ஒன்றும் போதுமே - உடம்பிலே வைத்து துன்புறுத்தினால் மட்டும் போதுமோ? விளக்கம் : முன் ஆண்டது என்றது குருத்த மரத்தின்கீழ் என்க. ஆண்டும் உடம்பினின்றும் பிரித்து அருளாதது ஏன் என்று வினவுவார் 'செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக்கு? என்றார். ஒறுத்தலாவது, உடம்பில் இருக்கச் செய்தல். இதனையே ஒரு பெருந்தண்டனையாக அடிகள் கருகின்றார் ஆதலின், உடம்பினின்றும் பிரித்து உனது பணியில் நிற்கச் செய்தல் வேண்டும் என்று வேண்டியபடி. தலைவராய் இருப்பவர் அடிக்கவும் வேண்டும்; அணைக்கவும் வேண்டும். ஆதலின், 'ஒறுத்தால் ஒன்றும் போதுமே?' என்றார். இதனால், இறைவனே வீடு பேறு அளிக்க வல்லவன் என்பது கூறப்பட்டது. 2 ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால் என்தான் கெட்ட திரங்கிடாய் எண்டோள் முக்கண் எம்மானே.
|