34. உயிருண்ணிப் பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) இறைவன், உயிரை வேறு தோன்றாதபடி தனது வியாபகத்தில் அடக்கிக்கொண்ட நிலையைக் கூறும் பதிகமாதலின், இஃது உயிருண்ணிப்பத்து எனப் பெயர் பெற்றது. உண்ணி - உண்ணுதலைச் செய்யும் பொருள்; இறைவன். சிவானந்தம் மேலிடுதல் அஃதாவது, பேரின்பம் பெருகுதல் என்பதாம். சீவத்தன்மை கெட்டபின் இந்நிலை உண்டாம் என்க. கலி விருத்தம் திருச்சிற்றம்பலம் பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாக மதாய்என் மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடாவிடைப பாகா செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய் எந்நாட்களித் தெந்நாள்இறு மாக்கேன்இனி யானே. பதப்பொருள் : பைந்நா - பசிய நாவினையுடைய, அரவு - பாம்பினது, படம் - படம் போன்ற, ஏர் அல்குல் - அழகிய அல்குலையுடைய, உமை - உமையம்மையினது, பாகமதாய் - பாகத்தையுடையவனாய், என் மெய் - என் உடம்பை, நாள்தொறும் - தினந்தோறும், பிரியா - விட்டு நீங்காது விளங்கி நிற்கின்ற, வினைக்கேடா - வினையை அறுப்பவனே, விடைப்பாகா - காளையூர்தியை உடையவனே, செந்நாவலர் - செம்மையான நாவன்மையுடையோர், பரசும் - துதிக்கும், புகழ் - புகழையுடைய, திருப்பெருந்துறை உறைவாய் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே, யான் இனி - நான் இனிமேல், எந்நாள் களித்து - எந்நாளில் உன்னைக் கண்டு களித்து, எந்நாள் இறுமாக்கேன் - எந்நாளில் இறுமாந்திருப்பேன்? விளக்கம் : இறைவன் உடலிடங்கொண்டவனாதலின், 'மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா' என்றார். உயிர்க் குயிராய் நின்று உணர்த்துவதை இவ்வாறு கூறினார் என்க. இறுமாந்திருத்தலாவது, யான் பெற்ற பேறு வேறு யார் பெறுவார் என்று இறைவன் கருணையை வியந்து பாராட்டியிருத்தலை. 'இறுமாந்திருப்பன் கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு, சிறுமான் ஏந்திக் தன் சேவடிக்கீழ்ச் சென்றங்கு இறுமாந்திருப்பன்
|