பக்கம் எண் :

திருவாசகம்
554


உன்னைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?

விளக்கம் : தாய் இனம், கடை, இடை, தலை என முப்பிரிவினது, குழந்தை அழுதாலும் பால் கொடுக்காதவள் கடையாய தாய்; அழும்போது கொடுப்பவள் இடையாய தாய்; காலம் அறிந்து கொடுப்பவள் தலையாய தாய். இறைவனோ, காலமறிந்து கொடுக்கும் தாயினும் மிக்க அன்புடையவன் என்பார், 'பால்நினைந்தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து' என்றார். உடலை வளர்க்கும் தாயைக்காட்டிலும் உயிரை வளர்க்கும் தாயாய் இருப்பவனாதலின், இறைவன் 'ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி அருளினான்' என்பதும் இது பற்றியேயாம். இனி, உள்ளத்திலே இன்பத்தினை நல்கிப் புறத்தேயும் காக்கின்றான் ஆதலின், 'தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே' என்றார். 'யானும் உள்ளும் புறமும் தொடர்ந்து பற்றினேன்' என்பார், 'யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்' என்றார்.

இதனால், இறைவன் உயிர்கள்மாட்டுப் பேரருளுடையவன் என்பது கூறப்பட்டது.

9

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பதப்பொருள் : புன்புலால் யாக்கை - அற்பமாகிய புலால் உடம்பு, புரைபுரை கனிய - மயிர்க்கால்தொறும் நெகிழ்ச்சியடைய, அது, பொன் நெடுங்கோயிலா - பொன்னாலாகிய பெரிய கோயிலாகும்படி, புகுந்து - அதனுள் எழுந்தருளியிருந்து, என் என்பு எலாம் உருக்கி - என்னுடைய எலும்புகளையெல்லாம் உருகும்படி செய்து, எளியை ஆய் - எளியவனாகிய, ஆண்ட - ஆட்கொண்டருளின, ஈசனே - ஆண்டவனே, மாசு இலா மணியே - குற்றமற்ற மாணிக்கமே, துன்பமே - துன்பமும், பிறப்பே - பிறப்பும், இறப்பொடு - இறப்பினோடு, மயக்கும் ஆம் - மயக்கமும் ஆகிய, தொடக்கு எலாம் அறுத்த - பற்றுகளெல்லாம் அறுத்தருளின, நல் சோதீ - மேலான சோதியே, இன்பமே - ஆனந்தமே, உன்னைச்