38. திருவேசறவு (திருப்பெருந்துறையில் அருளியது) இறைவனது பெருங்கருணைத் திறத்தை நினைந்து உருகியருளிய பதிகமாதலின், இது திருவேசறவு எனப்பட்டது. ஏசறவு - வருந்துதல். அஃது இங்கு மனம் நைந்து உருகுதலைக் குறித்தது. இதனுள் 'அன்றே' என்னும் தேற்ற இடைச்சொல் பலவிடத்தும் வந்து உருக்கத்தை வெளிப்படுத்துதல் அறியத்தக்கது. சுட்டறிவு ஒழித்தல் ஏகதேச ஞானத்தைப் போக்குதல். கொச்சகக்கலிப்பா திருச்சிற்றம்பலம் இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. பதப்பொருள் : ஒருங்கு திரை - அடங்கிய அலைகளையுடைய கங்கையின் நீர், உலவுசடை உடையானே - ததும்புகின்ற சடையை உடையவனே, இரும்பு தரும் மனத்தேனை - இரும்பு போன்ற வலிமையான நெஞ்சையுடையவனாகிய என்னை, ஈர்த்து ஈர்த்து - பலபாலும் உன் வசமாக இழுத்து, என் என்பு உருக்கி - என் எலும்பினை உருகும்படி செய்து, உன் கழலிணைகள் - உனது இரண்டு திருவடிகளில், கரும்பு தரு சுவை - கரும்பு தருகின்ற இனிமை போன்ற இனிமையை, எனக்குக் காட்டினை - எனக்கு உண்டாக்கியருளினாய், உன் பேர் அருள் - இத்தகைய உன்னுடைய பெருங்கருணை, நரிகள் எல்லாம் - நரிகள் எல்லாவற்றையும், பெருங்குதிரை ஆக்கிய ஆறு அன்றே - பெரிய குதிரைகளாக ஆக்கியது அல்லவா? விளக்கம் : நெறியல்லா நெறியிலே செல்லுகின்ற தம்மைப் பலகாலும் தன் வசம் இழுத்து ஆட்கொண்டானாதலின், ஈர்த்து ஈர்த்து' என்றார். ஞானம் பெற்றவர்கட்கு இறைவனது திருவடி இன்பம் உண்டாக்குதலின், 'கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழலிணைகள்' என்றார். இரும்பு மனத்தில் கரும்புச் சுவை தோன்றிச் செய்தது, நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் போன்றது என்றார்.
|