இதனால், இறைவன் இரும்பு போன்ற மனத்தையும் உருகும்படி செய்ய வல்லவன் என்பது கூறப்பட்டது. 1 பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க் குண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக் கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. பதப்பொருள் : பண் ஆர்ந்த - இசை நிரம்பிய, மொழி - சொல்லையுடைய, மங்கை - உமையம்மையின், பங்கா - பாகனே, நின் ஆள் ஆனார்க்கு - உனக்கு அடிமையானார்க்கு, உண் ஆர்ந்த - உண்ணுதல் பொருந்திய, ஆர் அமுதே - அருமையான அமுதமே, உடையானே - உடையவனே, அடியேனை - அடியேனை, மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு - மண்ணுலகில் பொருந்திய பிறப்புகளை அறுத்து, ஆள்வாய் - ஆட்கொள்ளும் பொருட்டு, நீ வா என்ன அன்றே - நீ வருக அழைத்ததனால் அல்லவா, உன் கழல் - உன் திருவடிகளை, கண் ஆரக் கண்டு - கண் நிரம்பக் கண்டு, உய்ந்த ஆறு - அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது? விளக்கம் : 'இறைவன் தன் அடியார்களுக்கு அவர்கள் உண்ணுகின்ற அமுதம் போல் இருக்கின்றான்' என்பார், 'நின் ஆளானார்க்கு உண்ணார்ந்த ஆரமுதே' என்றார், உயிர் எல்லாப் பிறப்பிலும் சென்று பிறந்து வருவதால் பிறவியை, 'மண்ணார்ந்த பிறப்பு' என்றார். 'நீ வா என்ன' என்றது, திருப்பெருந்துறையில் வந்து அறை கூவி ஆட்கொண்டதை. அச்சொல்லே திருவடியைச் சேர்ப்பித்தது என்பார், 'உன் கழல் கண்டே உய்ந்தவாறு' என்றார். இதனால், இறைவன் திருவடியை அவன் அருளைப் பெற்றே வணங்க இயலும் என்பது கூறப்பட்டது. 2 ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகின் ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாஎன் றோதமலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன் பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. பதப்பொருள் : ஓதம் மலி நஞ்சு உண்ட - கடலிற்பெருகிய விடத்தை உண்ட, உடையானே - உடையவனே, உம் பரம்பரனே - எமது மேலோனே, ஆதம் இலியான் - அன்பில்லாதவனாகிய யான், ஆர் தமரும் இன்றியே - சுற்றத்தார் ஒருவரும் இல்லாமலே, பிறப்பு இறப்பு என்னும் - பிறப்பு இறப்பு என்கிற, அருநரகில் - தப்புதற்கு அருமையான நரகத்தில், அழுந்துவேற்கு - மூழ்குகின்றவனான என்பொருட்டு, ஆவா என்று - ஐயோ என்று இரங்கி, அடியேற்கு - அடியேனாகிய எனக்கு, உன் பாத மலர் - உன் திருவடித் தாமரை மலரை, காட்டிய ஆறு அன்றே - காட்டிய வகையன்றோ உனது திருவருள்?
|