விளக்கம் : பிறப்பு இறப்புகள் மிகவும் துன்பமுடையன வாதலின், அவற்றையே நரகம் என்று கூறினார், 'தேவர்களை அழிக்க வந்த நஞ்சை உண்டு அவர்களைக் காத்ததைப் போல, பிறவியாகிய நரகத்தில் விழுந்து அழுந்துகின்ற என்னையும் திருவடியைக் காட்டிக் காத்தது என்ன வியப்பு!' என்பார், 'அடியேற்குன் பாதமலர் காட்டியவாறன்றே' என்றார். அஃது அவன் திருவருள் என்றவாறு. இதனால், இறைவன் பிறவித்துன்பத்தில் அழுந்தாமல் காக்க வல்லவன் என்பது கூறப்பட்டது. 3 பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர் உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண் டெச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோஎன் சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. பதப்பொருள் : பச்சைத் தால் அரவு ஆட்டீ - பசுமையான நாக்கினையுடைய பாம்பை அசைப்பவனே, படர் சடையாய் - விரிந்த சடையை உடையவனே, பாதமலர் உச்சத்தார் பெருமானே - திருவடியைத் தம்முடைய உச்சியிலே கொண்டிருப்பவரது பெருமானே, அடியேனை - அடியேனாகிய என்னை, உய்யக்கொண்டு அன்றே - உய்யக்கொண்டதனாலன்றோ, அச்சோ - ஐயோ, எச்சத்து ஆர் சிறு தெய்வம் - குறைபாடுகள் நிறைந்த சிறிய தெய்வங்களை, ஏத்தாதே - வழிபடாமல், உன் திறம் நினைந்து - உன்னுடைய அருள் திறத்தினையே உண்ணி, என் சித்தத்து ஆறு உய்ந்தவாறு - என் எண்ணத்தின்படியே யான் கடைத்தேறிய நிலை உண்டாயிற்று? விளக்கம் : உயிருண்ணிப்பத்து முதற்பாட்டில் 'பைந்நாப்பட அரவேர் அல்குல்' என்று அடிகள் கூறியிருப்பதால், ' பச்சைத்தாள்' என்னும் பாடத்தினும் 'பச்சைத்தால்' என்ற பாடமே பொருந்துவது எனக் கொள்ளப்பட்டது. 'இறைவன் உய்யக்கொண்டதனால் அவனது அருள் திறத்தினை நினைந்து போற்றி உய்ந்தேன்' என்றார். உய்தியாவது, முத்திப்பேறு. சிறு தெய்வங்களை ஏத்தினால் சில பதவிகளே கிடைத்து, மீண்டும் செத்துப் பிறக்கின்ற நிலை எய்தும் என்க. இதனால், இறைவன் திருவள் பெற்றார்க்கே பிற தெய்வங்களை நினையாத நிலை உண்டாகும் என்பது கூறப்பட்டது. 4 கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கிய லால் வார்கழல்வந் துற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே.
|