பக்கம் எண் :

திருவாசகம்
559


பதப்பொருள் : எம்பெருமானே - எம்பிரானே, கலை ஞானம் கற்றறியேன் - ஞான நூல்களைப் படித்து அறியேன்; கசிந்து உருகேன் - மனம் கசிந்து உருகவும் மாட்டேன்; ஆயிடினும் - ஆயினும், வாக்கு இயலால் - வாக்கின் தன்மையால், பிற தெய்வம் - வேறு தெய்வங்களை, அறியேன் - துதித்து அறியேன்; அதனால், வார்கழல் வந்து உற்று - உன்னுடைய நீண்ட திருவடிகளை வந்து அடைந்து, இறுமாந்து இருந்தேன் - இறுமாப்பு அடைந்து இருந்தேன், அடியேற்கு - அடியேனாகிய எனக்கு, நின் பொன் அருள் - உன் பொன் போன்ற திருவருளைப் புரிந்தது, நாய்க்கு - நாயினுக்கு, பொன் தவிசு - பொன்னாலாகிய ஆசனத்தை, இடுமாறு அன்றே - போலல்லவா?

விளக்கம் : 'நாவினால் பேசுமிடத்து இறைவனது புகழைத் தவிர வேறொன்றையும் பேசியறியேன்' என்பார், 'வாக்கியலால் மற்றறியேன் பிற தெய்வம்' என்றார், 'ஒரு தகுதியும் இல்லாத எனக்கு இத்துணை அருமையான கருணையைப் புரிந்தது, நாய்க்குப் பொன்னாசனம் இட்டது போன்றது' என்பார், 'பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றே' என்றார்.

இதனால், இறைவன் தன்னையே நினைவார்க்குப் பேரருள் செய்வான் என்பது கூறப்பட்டது.

5

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன்எம் பெருமானே உடையானே அடியேனை
அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே.

பதப்பொருள் : எம்பெருமானே - எம்பிரானே, உடையனே - உடையவனே, அம்பலத்து அமுதே - அம்பலத்திலாடுகின்ற அமுதமே, அடியேனை - அடியேனை, நின் அருளால் - உனது திருவருளால், அஞ்சேல் என்று - அஞ்சாதே என்று, ஆண்டவாறு அன்றே - ஆட்கொண்ட முறைமையாலல்லவா, பஞ்சு ஆய அடி - செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற பாதத்தையுடைய, மடவார் - பெண்டிரது, கடைக்கண்ணால் இடர்ப்பட்டு - கடைக்கண் பார்வையால் துன்பப்பட்டு, நஞ்சு ஆய - நஞ்சு போன்ற, துயர் கூர - துன்பம் மிக, நடுங்குவேன் - நடுங்குகின்றவனாகிய நான், உய்ந்தேன் - பிழைத்தேன்.

விளக்கம் : காமுகர்க்கு மாதரது கடைக்கண் நோக்குச் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுக்க வல்லது என்பார், 'மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர் கூர நடுங்குவேன்' என்றார்.

"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக் கமர்த்தன கண்"