உழல்கின்ற என்னை, நீ புகுந்து - நீ புகுந்தருளி, பேர்த்து ஆண்டவாறு - உழல்கின்ற நிலையை நீக்கி ஆண்டருளியது, கருணையினால் அன்றோ - உன்னுடைய கருணையினால் அன்றோ - உன்னுடைய கருணையினால் அல்லவா? விளக்கம் : பூத்தானே என்றது, உள்ள பொருள் மலர்ந்தது என்ற குறிப்பாம். புரளுதல், உலக வாழ்வில் அல்லற்பட்டு ஆற்றாது வருந்துதல். பேர்த்தலாவது, அல்லலைப் போக்குதலாம். 'பெருமான் அல்லலைப் போக்கியாண்டது, கருணையினால்' என்பார், 'பேர்த்தே நீ ஆண்டவாறு கருணையினால் அன்றே? என்றார். இதனால், இறைவன் உயிர்களின் துன்பத்தைப் போக்குவது கருணை என்பது கூறப்பட்டது. 8 மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத் தெருவுதொரும் மிகஅலறிச் சிவபெருமான் என்றேத்திப் பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமா றருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. பதப்பொருள் : இடை மருதே - திருவிடைமருதூரையே, இடம் கொண்ட - ஊராகக்கொண்ட, அம்மானே - எம் தந்தையே, மருவ இனிய - கூடுவதற்கு இனிமையான, மலர்ப்பாதம் - தாமரை மலர் போன்ற திருவடி, மனத்தில் வளர்ந்து - உள்ளத்தில் மலர்ந்து, உள் உருக - உள்ளம் உருக, தெருவுதொறும் மிக அலறி - தெருத்தோறும் மிகவும் ஓலமிட்டு அலறி, சிவபெருமான் என்று ஏத்தி - சிவபெருமானே என்று துதித்து, பருகிய - நுகர்ந்த, நின் - உன்னுடைய, பரங்கருணை - மேலான கருணையாகிய, தடங்கடலில் - பெரிய கடலில், படிவு ஆமாறு - படிந்து மூழ்கும் வண்ணம், எனக்கு இங்கு அருள் - அடியேனுக்கு இங்கு அருள் செய்வாயாக. விளக்கம் : மலர்ப்பாதம் மனத்தில் வளர்தலாவது, சிவமணம் உள்ளத்தில் கமழ்தலாம். அங்ஙனமுள்ளவர் தம் நினைவின்றி இறைவனையே போற்றியிருப்பார் என்பார், 'தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமான் என்றேத்தி' என்றார். மேலும், இந்நிலை மாறாதிருக்க அருள் புரிய வேண்டும் என வேண்டுவார், 'கருணை தடங்கடலிற் படிவாமாறு இங்கே எனக்கு அருள்' என்றார். இதனால், இறைவன் திருவருளை இடைவிடாது சிந்தித்திருக்க வேண்டும் என்பது கூறப்பட்டது. 9 நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய்இன் அமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.
|