பக்கம் எண் :

திருவாசகம்
563


39. திருப்புலம்பல்
(திருவாரூரில் அருளியது)

இறைவன்பால் கொண்ட அன்பின் மிகுதியால் அழுதலே இங்குப் புலம்பல் என்று சொல்லப்பட்டது. இதனைத் தேவாரத்துள் 'அழுமவர்க்கு அன்பர் போலும்' என்று கூறுவதனாலும் அறியலாம்.

சிவானந்த முதிர்வு

சிவானந்தத்தின் பெருக்கம். அஃதாவது, கிடைத்த இன்பம் மேலும் மேலும் பெருக அதனுள் திளைத்தலாம்.

கொச்சகக்கலிப்பா

திருச்சிற்றம்பலம்

பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே.

பதப்பொருள் : பூங்கமலத்து - அழகிய தாமரை மலரிலுள்ள, அயனொடு - பிரமனோடு, மால் - திருமாலும், அறியாத - அறியவொண்ணாத, நெறியானே - இயல்பையுடையவனே, கோங்கு அலர் சேர் - கோங்க மலர் போன்ற, குவிமுலையாள் கூறா - குவிந்த தனங்களையுடைய உமையம்மையின் பாகனே, வெண்ணீறு ஆடி - திரு வெண்ணீறு அணிவோனே - ஒங்கு எயில் சூழ் - உயர்ந்த மதில் சூழ்ந்த, திருவாரூர் உடையானே - திருவாரூரை இடமாக உடையவனே, அடியேன் - அடியேனாகிய நான், நின் - உனது, பூங்கழல்கள் அவையல்லாது -தாமரை மலர் போன்ற திருவடிகளாகிய அவற்றையன்றி, எவை - வேறு எவற்றையும், யாதும் புகழேன் - ஒரு சிறிதும் புகழமாட்டேன்.

விளக்கம் : கோங்கு ஒரு வகை மரம். சேர் உவம உருபு. 'ஓங்கெயில் சூழ் திருவாரூர் உடையான்' என்றதனால், அத்தலம் இறைவனுக்குச் சிறப்புத் தலமாதல் விளங்குகின்றது. இதன் பழமையையும் இறைவனுக்கு இதன்பாலுள்ள விருப்பத்தையும் ஓர் பாகம் 'திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னா திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே' என்றும், 'அமரர் நாடாளாதே ஆரூர் ஆண்ட அம்மானே' என்றும், 'திருநாவுக்கரசர் அருளிச் செய்தவற்றால் அறியலாம். 'உலகத்தில் புகழ்ச்சிக்குரியன இறைவன் திருவடி மலர்களே; மற்றப் பொருள் அல்ல' என்பதையே, 'நின் பூங்கழல்கள் அவையல்லாதெவை யாதும் புகழேன்' என்றார்.