இதனால், இறைவனது திருவடியைப் புதழ்தலே வேண்டும் என்பது கூறப்பட்டது. 1 சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப் படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான் உடையானே உனையல்லா துறுதுணைமற் றறியேனே. பதப்பொருள் : சடையானே - சடாபரத்தையுடையவனே, தழலாடீ - அழலாடுவோனே, தயங்கும் - விளங்குகின்ற, மூவிலை - மூவிலைகளையுடைய, சூலப் படையானே - சூலப்படையை யுடையவனே, பரஞ்சோதீ - மேலான சோதியே, பசுபதீ - பசுபதியே, மழ வெள்ளை - இளமை பொருந்திய வெண்மையான, விடையானே - இடபத்தையுடையவனே, விரி பொழில் சூழ் - விரிந்த சோலை சூழ்ந்த, பெருந்துறையாய் - திருப்பெருந்துறையில் வீற்றிருப் பவனே, உடையானே - உடையவனே, அடியேன் நான் -அடியேனாகிய நான், உனை அல்லாது - உன்னையன்றி, மற்ற உறுதுணை - வேறு உற்ற துணையை, அறியேன் - அறிந்திலேன். விளக்கம் : தழலாடீ என்றது சர்வசங்கார காலத்தில் தீயில் நின்று ஆடியதைக் குறித்தது. அங்ஙனம் ஆடிய காலத்தில் தனது சடைகள் சுழல ஆடினான் என்பதைக் குறிக்கவே, முதலில் 'சடையானே' என்றார். 'தாழ்சடை எட்டுத்திசையும் வீசி அங்கம் குளிர்ந்து அனல் ஆடும் எங்கள் அப்பனிடம் திரு ஆலங்காடே' என்ற காரைக்கால் அம்மையார் வாக்கையும் காண்க. 'பசுபதீ' என்றது ஆன்மாக்களுக்குத் தலைவனே என்றதாம். ஆன்மாக்கள் என்றமையால் அவற்றோடு தொடர்புடைய பாசத்தையும் கொள்க. இறைவனது இயல்புகளைக் கூறி, அவனே காக்க வல்லவன் ஆதலின், 'உடையானே உனையல்லா துறுதுணை மற்றறியேனே' என்றார். இதனால், இறைவனது திருவடியையே உற்ற துணையாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது கூறப்பட்டது. 2 உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையுங் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. பதப்பொருள் : குற்றாலத்து அமர்ந்து உறையும் -திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற, கூத்தா - கூத்தப்பெருமானே, உற்றாரை யான் வேண்டேன் - உறவினரை
|