பக்கம் எண் :

திருவாசகம்
567


பதப்பொருள் : எனை - என்னை, தனதாள் முயங்குவித்த - தன் திருவடியின்கண் கூடும்படி செய்த, குலாத்தில்லை ஆண்டானை - விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை, அடியேன் கொண்டன்றே - அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா? ஆதலின், துடி - உடுக்கையையொத்த, ஏர் - அழகிய, இடுகு இடை - சிறிய இடையையும், தூய் மொழியார் - இனிய சொல்லையும் உடைய மாதரது, தோள் நசையால் - தோள்களின் மேலுள்ள விருப்பத்தால், செடியேறு தீமைகள் - பாவம் மிகுவதற்குக் காரணமான தீய செயல்கள், எத்தனையும் செய்திடினும் - எவ்வளவு செய்தாலும், முடியேன் - நான் இனி இறக்க மாட்டேன்; பிறவேன் - அதனால், பிறக்கவும் மாட்டேன்.

விளக்கம் : சிவஞானிகள் தமக்கென ஒரு செயலின்றி, அரன் பணி நிற்பவராதலின், மேல்வினையும் அவற்றால் வரும் பிறவியும் உண்டாகாவாதலின், 'செடியேறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் முடியேன்' என்றார் ,அவர்கள் செயல் எல்லாம் தவச்செயல் என்பதை, 'சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்' என்று அடிகள் திருத்தோணோக்கத்தில் கூறியுள்ளமையால் அறியலாம்.

"ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானங்
கூடுமவர் கூடரிய வீடுங் கூடித்
குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டே இருப்பர்"

என்ற சித்தியாரின் திருவாக்காலும் நாம் சிவஞானிகளின் நிலையை உணரலாம்.

இதனால், இறைவன் திருவடியைப் பற்றினவர்க்கு மேல் இறப்பும் பிறப்பும் இல்லையாம் என்பது கூறப்பட்டது.

2

என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத்
துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுந்த
அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

பதப்பொருள் : என்பு உள் உருக்கி - எலும்பையும் உள்ளே உருகச்செய்து, இருவினையை ஈடு அழித்து - இருவினைகளாகிய சஞ்சிதம் பிராரத்தத்தின் வலியினை ஒழித்து, துன்பம் களைந்து - அவற்றால் உண்டாகின்ற துன்பத்தைப் போக்கி, துவந்துவங்கள் தூய்மை செய்து - தொடர்புகளையும் அறுத்துப் பரிசுத்தமாக்கி, முன்பு உள்ளவற்றை - முன்னேயுள்ள சஞ்சித வினையை, முழுது அழிய - முற்றிலும் தொலையும்வண்ணம், உள் புகுந்த - என் நெஞ்சத்தே எழுந்தருளிய, அன்பின் - அன்பினையுடைய, குலாத்தில்லை ஆண்டானை - விளக்கம் பொருந்திய தில்லை