பக்கம் எண் :

திருவாசகம்
568


ஆண்டவனை, கொண்டு அன்றே - அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா?

விளக்கம் : பிராரத்த அனுபவத்தில் உண்டாகும் விருப்பு வெறுப்புகள் துவந்துவங்களாம். விரும்பினால் நன்மையும் வெறுப்பினால் தீமையும் உண்டாதலின், இரண்டும் கூடா என்றவாறு, தூய்மை செய்தலாவது, அவற்றை இல்லையாகச் செய்தல். 'முன்புள்ளவற்றை' என்றது, முற்பிறவிகளில் செய்த பழவினையை. குரு தரிசனத்தால் நெருப்பின்முன் பஞ்சுப்பொதி போல இவை அழிந்து ஒழியுமாதலின், 'முன்புள்ளவற்றை முழுதழிய உள்புகுந்த ஆண்டானை' என்றார்.

இதனால், இறைவன் தன் அடியார்களுக்குச் சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்னும் வினைகள் அனைத்தையும் போக்கியருளுவான் என்பது கூறப்பட்டது.

3

குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிறியும் மனத்தார் பிறிவரிய பெற்றியனைச்
செறியும் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை
அன்றியும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

பதப்பொருள் : குறியும் - குறிக்கோளும், நெறியும் - அதனையடையும் வழியும், குணமும் இல்லார் - அவ்வழியில் செல்லும் பண்பும் இல்லாதவருடைய, குழாங்கள்தம்மை - கூட்டங்களை, பிறியும் மனத்தார் - பிரிந்து வாழ்கின்ற மனத்தையுடைய மெய்யடியார்களை, பிறிவு அரிய பெற்றியனை - பிரியாத தன்மையனும், செறியும் கருத்தில் - அன்பு நிறைந்த உள்ளத்தில், உருத்து - உருக்கொண்டு, அமுது ஆம் சிவபாதத்தை - அமுதம் போன்று இனிக்கும் சிவபதமாயிருப்பவனும், அறியும் - எல்லாவற்றையும் அறிகின்ற, குலாத்தில்லை ஆண்டானை - விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனுமாகிய இறைவனை, கொண்டு - அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா?

விளக்கம் : குறி - இறைவனையடைய வேண்டும் என்ற குறிக்கோள். நெறி - அவனையடைவதற்குரிய சரியை கிரியை யோகம் ஞானம் என்பன. குணம் - மெய்ந்நெறியைச் சார வேண்டும் என்ற நற்பண்பு. கருத்தில் உருத்தலாவது, உள்ளத்தில் வெளிப்படுதல்.

இதனால், இறைவன் நினைப்பவர் மனத்தில் விளங்கித் தோன்றுவான் என்பது கூறப்பட்டது.

4

பேரும் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்டரெல்லாஞ்
சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.