41. அற்புதப் பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) அடிகள் இறைவன் தம்மை ஆட்கொண்டருளிய அதிசயத்தைப் போற்றிக் கூறிய பகுதியாதலின், இஃது 'அற்புதப் பத்து' எனப்பட்டது. முன்பு அதிசயப் பத்தில், 'அதிசயம் கண்டாம்' என்று அது கண்கூடாக நிகழ்ந்தமையைக் குறித்தார்; இதில் அவ்வதிசயம் அறிதற்கரிய பெருமையையுடையது என்கின்றார். அனுபவம் ஆற்றாமை தாம் அனுபவிக்கின்ற அனுபவத்தை அளவிட்டுச் சொல்ல இயலாமை. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் மைய லாயிந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியுள் அகப்பட்டுத் தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி இணைகாட்டி மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. பதப்பொருள் : மையலாய் - மயக்கவுணர்ச்சியுடையவனாய், இந்த மண்ணிடை வாழ்வு எனும் - இந்த மண்ணுலக வாழ்வு என்கிற, ஆழியுள் அகப்பட்டு - கடலில் அகப்பட்டு, தையலார் எனும் - பெண்கள் என்கிற, சுழித்தலைப்பட்டு - சுழலினிடத்துச் சிக்கி, நான் தலை தடுமாறாமே - நான் நிலை கெட்டுப் போகாதபடி, எங்கள் பெருமான், மெய்யனாய் - உண்மைப் பொருளாய்த் தோன்றி, தன் பொன்னடி இணை காட்டி - தனது அழகிய திருவடிகள் இரண்டையும் யான் காணும்படி காட்டி, பொய்யெலாம் விட - பொய்ப்பொருளெல்லாம் விட்டு நீங்கும்வண்ணம், திருவருள் தந்து - திருவருள் புரிந்து, வெளி காட்டி - ஞான ஒளியைக் கொடுத்து, முன் நின்றது - எதிரே நின்றதாகிய, ஓர் அற்புதம் விளம்பேன் - ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல வல்லேனல்லேன். விளக்கம் : பொருளல்லவற்றைப் பொருள் என்று உணர்தல் மயக்கம். வாழ்வு, கடல்; தையலார், சுழல்; பொன்னடி, புனை; வெளி, கரை. மெய்ப்பொருளாகிய சிவன் மயக்கத்தைச் செய்கின்ற வாழ்வாகிய கடலைக் கடத்தற்குத் திருவடியாகிய புணையினை
|