நல்கி, தெளிவைத் தருகின்ற ஞானமாகிய கரையில் ஓடக்காரனாக நின்று ஏற்றுகிறான் என்றபடி. 'பொய்யெலாம் விடத் திருவருள் புரிந்து' என்றது, அஞ்ஞானத்தை அகற்றியதையும், 'வெளிக்காட்டி' என்றது, ஞானத்தை அருளியதையும் குறித்தபடி. இதனால், இறைவன் மயக்கத்தைப் போக்க வல்லவன் என்பது கூறப்பட்டது. 1 ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப் போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழ லிணைகாட்டி வேந்த னாய்வெளி யேஎன்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. பதப்பொருள் : ஏய்ந்த - பொருத்தமான, மா - சிறந்த, மலர் இட்டு - பூக்களைத் தூவி, முட்டாதது - தடைப்படாதாகிய, ஓர் இயல்பொடும் - ஒரு தன்மையோடும், வணங்காதே - வழிபடாமலே, சாந்தம் ஆர்முலை - சந்தனக் குழம்பு பூசப்பெற்ற தனங்களையுடைய, தையல் நல்லாரொடும் - பெண்களோடும் தலை தடுமாறாகிப் போந்து - நிலை கலங்கிச் சேர்ந்து, யான் துயர் புகாவணம் - நான் துன்பம் அடையாதபடி, எங்கள் பெருமான், அருள் செய்து - எனக்கு அருள் புரிந்து, பொன் கழல் இணை காட்டி - அழகிய தனது திருவடியைக் காட்டி, வேந்தனாய் - தலைவனாய், வெளியே - வெளிப்படையாக, என்முன் நின்றது - எனக்கு எதிரே நின்றதாகிய, ஓர் அற்புதம் விளம்பேன் - ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல வல்லேனல்லேன். விளக்கம் : 'ஏய்ந்த மாமலர்' என்றது, பூசைக்கு விதிக்கப்பட்டனவாகிய மலர் என்றபடி. முட்டாததோர் இயல்பாவது, நாடோறும் தவறாது வழிபடும் முறை. மாதரது ஆசை மயக்கத்தை விளைவித்துத் துன்பமே தருமாதலின், அதனை நீக்கியாண்டான் என்பார், 'போந்து யான் துயர் புகாவணம் அருள் செய்து' என்றார். ஞானத் தலைவனாதலின், ஞானாசாரியனாய் வந்த நிலையை, 'வேந்தனாய்' என்றார். 'வேகங்கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க' என முன்னே கூறியிருந்தலையும் காண்க. இதனால், இறைவன் துன்பத்தை நீக்கி அருளவல்லவன் என்பது கூறப்பட்டது. 2 நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனுமாயக் கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்
|