பக்கம் எண் :

திருவாசகம்
58


அவ்வுருவத்தை மறைத்து விடுகிறான். அது போன்று, இறைவன் உயிர்களுக்கு அருளும்பொருட்டு ஓர் உருவத்தைக் காட்டியருளிப் பின்னர் அவ்வுருவத்தை மறைத்துவிடுகிறான். இந்நிலையைக் காட்டுவார், "இந்திரஞாலம் போல வந்தருளி" என்றார். இங்கே, ‘ஒரு முதல் உருவு’ என்றது குரு வடிவம். அக்குரு வடிவம் அவனது இயற்கை வடிவத்தை மறைத்து வந்தது ஆகையால், ‘அந்தம் இல் பெருமை அழல் உருக்கரந்து’ என்றார்.

இனி, இறைவன் உயிர்தோறும் கலந்து அவற்றை இயங்கச் செய்ததும், அங்ஙனம் இயங்கும் போதும் அவை இறைவன் ஏவல் வழியன்றி இயங்க மாட்டா என்பதையும் விளக்க, "எவ்வெவர் தன்மையும் தன்வயிற்படுத்து" என்றார். அங்ஙனம் எல்லா உயிரோடும் கலந்து ஒன்றாய் இருந்தும், இறைவன் இயல்பு வேறாய் உள்ளது என்பதை விளக்குவார், "தானேயாகிய எம்மிறை" என்றார். திருக்கழிப்பாலை என்னும் தலம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ளது.

100. மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை யாண்ட பரிசது பகரின்
ஆற்ற லதுவுடை யழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்;

பதப்பொருள் : மந்திரம் ஆம் மலை - மறைமொழிகள் வெளிப்படுவதற்கு இடமான பெரிய மலையாகிய, மகேந்திர வெற்பன் - மகேந்திர மலையையுடையவன், அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் - முடிவற்ற பெருமையையும் அருளையுமுடைய பெரியோன், எம்தமை ஆண்ட பரிசது பகரின் - எம்மை ஆண்டருளிய தன்மையைச் சொல்லின், ஆற்றல் அது உடை - வல்லமையையுடைய, அழகு அமர் திருஉரு - அழகமைந்த திருமேனியில், நீற்று கோடி நிமிர்ந்து காட்டியும் - திருவெண்ணீற்றுக் கொடியை உயர்த்திக் காட்டியும்.

விளக்கம் : வேதாகமப் பொருளை உமாதேவியாருக்கும் முனிவருக்கும் அருளிய இடம் மகேந்திர மலை என்பார். "மந்திர மாமலை மகேந்திர வெற்பன்" என்றார். இதுகாறும் இறைவனது பல அருட்செயலகளைக் கூறி, இறுதியல் தமக்கு அருளிய பான்மையை விளக்கப் புகுவார், "எந்தமையாண்ட பரிசது பகரின்" என்றார், 'ஆற்றலதுவுடை' என்பது முதல் தசாங்கம் (பத்து உறுப்புகள்) கூறத் தொடங்குகின்றார். தசாங்கங்களாவன : கொடி, ஆறு, முரசு, படை, மாலை, ஊர்தி, நாடு, ஊர், பெயர், மலை என்பன. அவற்றுள் இதில் கொடி கூறப்பட்டது. திருநீறே கொடி எனப்பட்டது. ‘கொடி’ என்பது, ‘கோடி’ என முதல் நீண்டது.