பக்கம் எண் :

திருவாசகம்
59


105. ஊனந் தன்னை ஒருங்குட னறுக்கும்
ஆனந் தம்மே ஆறா அருளியும்;

பதப்பொருள் : ஊனந்தன்னை - பிறவித்துன்பத்தை, ஒருங்குடன் அறுக்கும் - ஒருங்கே அழிக்கும், ஆனந்தம்மே - இன்பமே, ஆறு ஆ(க) அருளியும் - ஆறாகத் தந்தருளியும்.

விளக்கம் : ஆனந்தமே இங்கு ஆறு எனப்பட்டது.

மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்;

பதப்பொருள் : மாதின் கூறு உடை - உமாதேவியின் பாகத்தையுடைய, மாப்பெருங்கருணையன் - மிகவும் பெருங்கருணையையுடையவன், நாதம் பெரும்பறை - நாதமாகிய பெரிய பறை, நவின்று கறங்கவும் - முழங்கி யொலிக்கக் கொண்டும்.

விளக்கம்: நாத தத்துவமே இங்கு முரசு எனப்பட்டது.

அழுக்கடை யாம லாண்டுகொண் டருள்பவன்

110. கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்;

பதப்பொருள் : அழுக்கு அடையாமல் - அன்பர் மனம் களங்க மடையாமல், ஆண்டுகொண்டு அருள்பவன் - ஆட்கொண்டருள்வோன், கழுக்கடைதன்னை - முத்தலை வேலினை, கைக்கொண்டு அருளியும் - கைப்பிடித்தருளியும்.

விளக்கம் : அன்பர் மனத்துள்ள மாசை நீக்குவதற்கு இறைவன் முத்தலை வேலைப் படையாகக் கொண்டருள்கிறான்.

முத்தலை வேலே இங்குப் படை எனப்பட்டது.

மூல மாகிய மும்மல மறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை*
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்;

பதப்பொருள் : மூலம் ஆகிய - மூலகாரணமாகிய, மும்மலம் அறுக்கும் - மூன்று மலங்களையும் நீக்குகிற, தூய மேனி - பரிசுத்த மாகிய திருமேனியில், சுடர்விடு சோதி - ஒளி வீசுகின்ற சோதியாய் உள்ளவன், காதலன் ஆகி - அன்பரிடத்து அன்புடையனாகி, கழுநீர் மாலை - செங்கழுநீர் மலர் மாலையை, ஏல் உடைத்தாக - பொருத்த முடையதாக, எழில் பெற அணிந்தும் - அழகு பெறத் தரித்தும்.

விளக்கம் : மும்மலங்களாவன : ஆணவம், மாயை, கன்மம் என்பன. உயிரோடு அநாதியே கலந்திருந்து அறிவை விளங்கவொட்டாது மறைப்பது ஆணவம்; சற்றே அறிவை விளங்க வைப்பது மாயை; அறிவு விளங்கும் போது உயிர்களுக்கு அனுபவத்தைக் கொடுப்பது கன்மம். ஆக, மூன்றுமே துன்பம்