பக்கம் எண் :

திருவாசகம்
60


தருவன. இம்மூன்றையும் அழித்து இன்பத்தைக் கொடுப்பவன் இறைவன் என்பதைக் காட்டுவார், "மும்மலம் அறுக்கும் சோதி" என்றார். இறைவன் உயிர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் பொருட்டுச் செங்கழுநீர் மலர் மாலையை அழகு பெற அணிந்துகொள்கிறான்.

இதில் செங்கழுநீர்ப்பூ மாலையாகக் கூறப்பட்டது.

115. அரியொடு பிரமற் களவறி யாதவன்
பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்;

பதப்பொருள் : அரியொடு பிரமற்கு - திருமாலுக்கும் பிரமனுக்கும், அளவு அறியாதவன் - எல்லையறியப்படாதவன், பரிமாவின்மிசை - குதிரையின்மீது, பயின்ற வண்ணமும் - ஏறி வந்த விதமும்.

விளக்கம் : "அரியொடு பிரமனால் அறியப்படாத இறைவன அடியேன்பொருட்டுக் குதிரையை ஊர்தியாகக் கொண்டருளினான்" என்றார்.

இதில் குதிரையாகிய ஊர்தி கூறப்பட்டது.

மீண்டு வாரா வழியருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்;

பதப்பொருள் : மீண்டு வாரா வழி - மீண்டும் பிறவிக்கு வாராத முத்தி நெறியை, அருள் புரிபவன் - அன்பர்க்குக் கொடுப்பவன், பாண்டி நாடே - பாண்டி வளநாடே, பழம் பதியாகவும் - பழைய இடமாகக்கொண்டும்.

விளக்கம் : இறைவன் மெய்ப்பொருள் கண்டார்க்கு வீடு பேற்றினைக் கொடுத்துப் பிறவித்துன்பத்தைப் போக்கியருளுகிறான் என்பதை விளக்க, "மீண்டு வாரா வழியருள் புரிபவன்" என்றார். "மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி" என்றார் நாயனாரும். இறைவன் சோமசுந்தரப் பெருமானாய் வீற்றிருந்து, தடாதகைப் பிராட்டியாரை மணம் புரிந்து, பல திருவிளையாடல்கள் செய்தருளின இடம் பாண்டி நாடாகும். அதனால், "பாண்டி நாடே பழம்பதியாக" என்றார்.

இதில் பாண்டி நாடாகிய நாடு கூறப்பட்டது.

பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்

120. உத்தர கோச மங்கைஊ ராகவும்;

பதப்பொருள் : பத்தி செய் அடியரை - அன்பு செய்கின்ற அடியவரை, பரம்பரத்து உய்ப்பவன் - மிகவும் மேலான முத்தி யுலகத்தில் சேர்ப்பவன், உத்தரகோச மங்கை - திருவுத்தரகோச மங்கையை, ஊர் ஆகவும் - திருப்பதியாகக் கொண்டும்.

விளக்கம் : பத்தி செய்யும் அடியார்க்கு அருளும்வண்ணம் இறைவன் திருவுத்தரகோச மங்கையை ஊராகக் கொண்டருளினான்.

இதில் உத்தரகோசமங்கையாகிய ஊர் கூறப்பட்டது.