ஆதி மூர்த்திகட் கருள்புரிந்த தருளிய தேவ தேவன் திருப்பெய ராகவும்; பதப்பொருள் : ஆதி மூர்த்திகட்கு - முதன்மையான மும்மூர்த்திகட்கு, அருள் புரிந்தருளிய - திருவருள் செய்த, தேவ தேவன் - மகாதேவன் என்பதே, திருப்பெயர் ஆகவும் - திருநாமமாகக் கொண்டும். விளக்கம் : பிரமன், விட்டுணு, உருத்திரன் என்பார் ஆதி மூர்த்திகளாவர். அவர்கள் முறையே படைத்தல், காத்தல், அழித்தல்களைப் புரிபவர்கள், இறைவன் அவர்களுக்கு அவ்வதி காரங்களைக் கொடுத்தருள் கின்றானாதலின், ‘அருள் புரிந்தருளிய தேவதேவன்’ என்ற பெயர் கொடுத்தார். இதில் தேவதேவன் எனும் பெயர் கூறப்பட்டது. இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி அருளிய பெருமை யருண்மலை யாகவும்; பதப்பொருள் : இருள் கடிந்து அருளிய - அடியார்கட்கு அஞ்ஞான இருளை நீக்கியதனால் ஆகிய, இன்ப ஊர்தி - பேரின்பமாகிய ஊர்தியை, அருளிய பெருமை அருள் - கொடுத்தருளிய பெருமையை உடைய அருளே, மலையாகவும் - மலையாகக்கொண்டும். விளக்கம் : அறியாமை, துன்பத்தைத் தருவது; அறிவு, இன்பத்தைத் தருவது. அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களுக்கு அறிவே வடிவமாயுள்ள இறைவன் துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்குகிறான். அதனால், ‘இருள் கடிந்தருளிய இன்ப வூர்தி அருளிய பெருமை அருள்’ என்றார். உயிர்கள் வாழ வேண்டும் என்ற அருளே இன்பத்தை வழங்குவதற்குக் காரணமாகையால், 'அருளையே மலையாகவுடையான் இறைவன், ' என்றார். இதில் அருளாகிய மலை கூறப்பட்டது. இதுகாறும் கொடி முதலாக மலையீறாகத் தசாங்கம் எனப்படும் பத்து உறுப்புகளும் கூறப்பட்டன. 125. எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி; பதப்பொருள் : எப்பெருந்தன்மையும் - எப்படிப்பட்ட பெருந்தன்மையையும், எ எவர் திறமும் - எவ்வகைப்பட்டவர் திறத்தினையும், அப்பரிசு அதனால் - அவ்வத்தன்மைகளால், ஆண்டு கொண்டு அருளி - ஆட்கொண்டருளி. விளக்கம் : உயிர் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என முத்திறப்படும். விஞ்ஞானகலர் ஆணவமாகிய ஒரு மலம்
|