பக்கம் எண் :

திருவாசகம்
62


மட்டும் உடையவர். பிரளயாகலர், ஆணவம், கன்மம் ஆகிய இரு மலம் உடையவர், சகலர், ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலம் உடையவர். அதனால், இம்முத்திறப்பட்ட உயிர்களையும் உணர்த்துவார், "எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்" என்றார். இறைவன் விஞ்ஞானகலர்க்கு உள் நின்றும், பிரளயாகலர்க்கு நாற்றோளும் முக்கண்ணும் கறை மிடறும் கொண்டு முன்னின்று காட்சி கொடுத்தும், சகலர்க்குக் குரு வடிவாய்த் தோன்றியும் ஞானத்தை அருளுவான்; சகலருள்ளும் அவரவரை அவரவர்க்கு ஏற்ற பெற்றியால் ஆட்கொள்வன் ஆதலின், "அப்பரிசதனால் ஆண்டு கொண்டருளி" என்றார்.

நாயி னேனை நலமலி தில்லையுள்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல வென்னை ஈங்கொழித் தருளி

130. அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்
ஒன்ற வொன்ற வுடன்கலந் தருளியும்;

பதப்பொருள் : நாயினேனை - நாய் போன்ற என்னை, நலம் மலி தில்லையுள் - நன்மை மிகுந்த தில்லையுள், கோலம் ஆர்தரு - அழகு நிறைந்த, பொதுவினில் வருக என - ‘அம்பலத்தில் வருக’ என்று சொல்லி, ஏல - பொருந்த, என்னை - அடியேனை, ஈங்கு ஒழித்து அருளி - இவ்வுலகத்திலே நிறுத்தி, அன்று உடன் சென்ற - அன்று தன்னோடு கூடப்போன, அருள் பெறும் அடியவர் - அருள் பெற்ற அடியார், ஒன்ற ஒன்ற - தன்னோடு பொருந்தப் பொருந்த, உடன் கலந்து அருளியும் - அவரோடு தான் கலந்து மறைந்தருளியும்.

விளக்கம் : திருப்பெருந்துறையில் இறைவன் குரு வடிவில் தோன்றிக் குருந்த மரத்து நிழலில் அடியார் புடை சூழ வீற்றிருந்தான். அவ்விடத்துக்கு அடிகள் வர, அவருக்கு அருள் புரிந்து, பின்னர் அவரை, "நீ தில்லைக்கு வருக" என்று விடுத்துத் தன்னோடுள்ள அடியாரோடும் இறைவன் மறைந்தருளினான். அதனால், தமக்குப் போதிய பக்குவமில்லை என்று கருதி அடிகள் வருந்துகிறார். இதனால், பிரிவாற்றாமை விளங்குகிறது.

பொது, அம்பலம், மன்றம் என்பன ஒரு பொருட்கிளவிகள்.

எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்
மாலது வாகி மயக்கம் எய்தியும்
பூதல மதனில் புரண்டுவீழ்ந் தலறியும்

135. கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி
நாத நாத என்றழு தரற்றிப்
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநா டகவென்
றிதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும்;