பதப்பொருள் : எய்த வந்து இலாதார் - தன்னைக் கலக்க வாராதவர்களுள் சிலர், எரியில் பாயவும் - தீயில் குதிக்கவும், மாலது ஆகி - ஆசை கொண்டு, மயக்கம் எய்தியும் - மயக்கம் அடைந்தும், பூதலம் அதனில் - பூமியில், புரண்டு வீழ்ந்து அலறியும் - புரண்டு வீழ்ந்தலறியும் நிற்க. கால் விசைத்து ஓடி - காலால் வேகம் கொண்டு ஓடி, கடல் புக மண்டி - கடலில் விழ நெருங்கி, நாத நாத என்று - நாதனே நாதனே என்று, அழுது அரற்றி - அழுது புலம்பி, பாதம் எய்தினர் - திருவடியையடைந்தவர்கள், பாதம் அடையவும் - திருவடியையடையவும், பதஞ்சலிக்கு அருளிய - பதஞ்சலி முனிவர்க்கு அருள் செய்த, பரம நாடக என்று - மேலான கூத்தனே என்று, இதம் சலிப்பு எய்த நின்று - இதயம் வருந்த நின்று, ஏங்கினர் ஏங்கவும் - ஏங்கினவர் ஏங்கி நிற்கவும். விளக்கம் : இறைவனை அடைய முடியாதவர்கள் நெருப்பிலே விழுந்து மாய்ந்தார்கள். ஆனால், இறைவனையடைய வேண்டுமென்று ஆசை கொண்டவர் பூமியிலே புரண்டு வீழ்ந்து அலறி, கடலிலே புகுவதற்கு நெருங்கி, ‘நாத நாத’ என்று அரற்றித் திருவடியையடைந்தனர். இதனால், இறை வேட்கையுடையோர் செயல்கள் விளக்கப்பட்டன. ஒரு காலத்தில் பதஞ்சலிக்கு அருளியது : ஆதிசேடன் இறைவனது திருக்கூத்தைக் காண வேண்டும் என்று கயிலையைச் சார்ந்து கடுந்தவம் இயற்றினான். இறைவன் அதற்கு இரங்கித் ‘தில்லைக்கண் சென்றால் திருக்கூத்தைக் காணலம்’ என்று பணித்தான். அங்ஙனமே ஆதிசேடன் தில்லைக்கண் வந்து தைப்பூச நன்னாளில் புலிக்கால் முனிவரோடு இறைவன் திருக்கூத்தைக் கண்டு களித்தான். பாம்புருவம் தாங்கினமையால் ‘பதஞ்சலி முனிவர்’ என்ற பெயர் உண்டாயிற்று. (கோயிற்புராணம் - உமாபதி சிவம்) இறைவன் சிறந்த திருக்கூத்து இயற்றியமையால், ‘பரம நாடகன்’ எனப்பட்டான். இக்கூத்தைக் காணாதவர் வருந்தினர் என்பார், "ஏங்கினர் ஏங்கவும்" என்றார். 140. எழில்பெறும் இமயத் தியல்புடை அம்பொற் பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக் கருளிய திருக்கூத் தழகுறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் ஒலிதரு கைலை யுயர்கிழ வோனே. பதப்பொருள் : ஒலி தரு (அருவிகள்) ஒலிக்கின்ற, கைலை - கயிலாய மலையின், உயர்கிழவோன் - சிறந்த தலைவன், எழில் பெறும் இமயத்து இயல்புடை - அழகு பெற்ற இமய
|