மலையின் தன்மை வாய்ந்த, அம்பொன் பொலிதரு - அழகிய பொன்னினால் செய்யப்பட்டு விளங்குகின்ற, புலியூர்ப் பொதுவினில் - தில்லையம்பலத்தினில், நடம் நவில் - நடனம் செய்த, கனிதரு செவ்வாய் - கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையுடைய, உமையொடு - உமாதேவியோடு, காளிக்கு - காளிக்கும், அருளிய - அருள் செய்த, திருக்கூத்து - திருக்கூத்தில், அழகு உறு சிறு நகை - அழகு மிக்க புன்னகையையுடைய, இறைவன் - எம்பெருமான், ஈண்டிய - தன் திருவடியைச் சரணாக அடைந்த, அடியவரோடும் - தொண்டர்களுடனே, பொலிதரு புலியூர் - விளங்குகின்ற, புலியூரில், புக்கு - எழுந்தருளி, இனிது அருளினன் - இனிதாக எனக்கு அருள் செய்தனன். விளக்கம் : காளிக்கு அருளியது : தில்லை என்னும் தலம், புலிக்கால் முனிவர் பூசை செய்து பேறு பெற்ற இடமாதலின், புலியூர் எனப்பட்டது; ஒரு காலத்தில் தாருகன் என்னும் அரக்கனைக் கொல்லும்பொருட்டுத் துர்க்கையால் ஏவப்பட்ட காளி அவனைக் கொன்ற பின்னும் வெறி பிடித்து உலகத்துள்ள உயிர்களுக்கெல்லாம் தீங்கிழைக்கப் புகுந்தாள். அப்பொழுது உலகைக் காக்கும்பொருட்டு அம்மையப்பனாகிய இறைவன் அவள் முன் தோன்றிக் கொடுங்கூத்தியற்றி, அவள் வலியடக்கியருளினான். ‘கயிலைக்கிழவோன் புலியூர்ப் புக்கு இனிதருளினன்’ என்க.
|