ஆட்கொண்டான் என்றார். பக்குவான்மாக்களது பிறவித் துன்பத்தைத் தீர்த்தருளுவான் என்று அறிதலே அவனது கிடப்பை அறிதலாம். இதனால், இறைவன் அடியாரது துன்பத்தைத் துடைத்தருளுவான் என்பது கூறப்பட்டது. 9 அங்கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபர மாயதோர் இன்பமெய்தச் சங்கங் கவர்ந்துவண் சாத்தினொடுஞ் சதுரன் பெருந்துறை ஆளிஅன்று மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி வாரெம்பி ரானாவாரே. பதப்பொருள் : அம் கணன் - அழகிய கண்ணையுடையவனும், எங்கள் அமரர் பெம்மான் - எங்கள் தேவதேவனும், அடியார்க்கு அமுதன் - அடியவர்களுக்கு அமுதம் போன்றவனும், அவனி வந்த - பூமியில் குருவாகி வந்த, எங்கள் பிரான் - எங்கள் பெருமானும், சதுரன் - மிக்க திறமையுடையவனும் ஆகிய, பெருந்துறை ஆளி - திருப்பெருந்துறை இறைவன், இரும்பாசம் தீர - பெரிய பாசம் நீங்கவும், இகபரம் ஆயது - இம்மை மறுமைப் பயனாய் இருப்பதாகிய, ஓர் - ஒப்பற்ற, இன்பம் எய்த - ஆனந்தத்தையடையவும், அன்று - அந்நாளில், சங்கம் கவர்ந்து - சங்கினாலாகிய வளையல்களை முனி பத்தினியர்களிடம் கவர்ந்துகொண்டு, வண்சாத்தினொடும் - வளமையான வணிகக் குழாத்தினோடும், மங்கையர் மல்கும் - வணிகப் பெண்டிர் நிறைந்துள்ள, மதுரை சேர்ந்த - மதுரையம்பதியை அடைந்த, வகை அறிவார் - தன்மையினை அறியக்கூடியவர்கள், எம்பிரான் ஆவார் - எமக்குத் தலைவராவார்கள். விளக்கம் : அருளே கண்ணாகவுடைய எங்கள் தேவர் பிரான் ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கி இன்பப் பேறு அளிக்க மதுரை வந்து அடைந்தான் என்றார். சங்கம் கவர்ந்தது, தாருகாவனத்து முனி பத்தினியர் வளையல்களைப் பிட்சாடன மூர்த்தியாகச் சென்று கவர்ந்ததையாம். மங்கையர் என்றது வணிக மகளிரை. தாருகாவனத்து முனி பத்தினியரே மதுரையில் வணிக மகளிராய்ப் பிறந்து இறைவன் வளையல் கொணர்ந்து இடப்பெற்றனர் அப்பிறப்பு நீங்கப்பெற்றனர் என்பதும் வரலாறு (திருவிளையாடற்புராணம்). மதுரை சேர்ந்த வகை அறிதலாவது, இறைவன் குற்றத்தைப் பொறுத்தருளுவான் என்று அறிதல். இதனால், இறைவன் ஆன்மாக்களது மயக்கத்தைப் போக்கி ஞானத்தை நல்க வல்லவன் என்பது கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|