பக்கம் எண் :

திருவாசகம்
600


44. எண்ணப்பதிகம்
(தில்லையில் அருளியது)

அடிகள் இறைவனை வந்து அடைய வேண்டும் என்ற தமது குறிக்கோளை எடுத்துக் கூறும் பகுதியாதலின், இஃது, 'எண்ணப்பதிகம்' எனப்பட்டது. எண்ணம் - குறிக்கோள்.

ஒழியா இன்பத்து உவகை

நீங்காத பேரின்பத்தில் மகிழ்ந்திருக்க விரும்புதல்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெருமானே
செங்கம லம்மலர் போலும்
ஆருரு வாயஎன் ஆரமுதேஉன்
அடிய வர்தொகை நடுவே
ஓருரு வாயநின் திருவருள்காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே.

பதப்பொருள் : சீர் உரு ஆய - சிறப்பையே வடிவமாகவுடைய, சிவபெருமானே - சிவபிரானே, செங்கமலம் மலர் போலும் - செந்தாமரை மலர் போன்ற, ஆர் உரு ஆய - அரிய உருவத்தையுடைய, என் ஆர் அமுதே - எனது அரிய அமுதமானவனே, பார் - பூவுலகில் தோன்றுகின்ற, உரு ஆய - உடம்புகளாகிய, பிறப்பு அற வேண்டும் - பிறவிகள் வாராது ஒழிய வேண்டும்; அதற்கு, பத்திமையும் பெறவேண்டும் - உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும்; அது நிலைக்க, உன் அடியவர் தொகை நடுவே - உன்னடியார் கூட்டத்தின் நடுவில், ஓர் உரு ஆய - ஒப்பற்ற வடிவமாகிய, நின் திருவருள் காட்டி - உன்னுடைய திருவருளைக் காட்டி, என்னையும் - அடியேனையும், உய்ய - உய்தி பெறும்படி, கொண்டருள் - சேர்த்துக்கொண்டருள்வாயாக.

விளக்கம் : 'பாருரு வாய பிறப்பு' என்பது மாயை சம்பந்தமான பிறப்பு என்றும் கொள்ளலாம். இறைவனது வடிவம் மாயையன்றி அருளேயாதலின், அதனை 'ஓருரு' என்றார். பிறவி நீங்கப் பத்தியும், பத்தி உண்டாக அடியவர் கூட்டமும், கூட்டம் பெற இறைவன் அருளும் வேண்டும் என்று எண்ணியபடியாம்.