இதனால், அடியார் கூட்டம் பிறவியறுதற்குரிய சாதனம் என்பது கூறப்பட்டது. 1 உரியேன் அல்லேன் உனக்கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந் தரியேன் நாயேன் இன்னதென் றறியேன் சங்கரா கருணையினால் பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழ லடிகாட்டிப் பிரியேன் என்றரு ளியஅருளும் பொய்யோ எங்கள் பெருமானே. பதப்பொருள் : சங்கரா - சங்கரனே, எங்கள் பெருமானே - எம் தலைவனே, உனக்கு அடிமை - உனக்கு அடிமையாயிருத்தற்கு, உரியேன் அல்லேன் - உரிய தகுதியுடையேனல்லேன்! எனினும், உன்னைப் பிரிந்து - உன்னை விட்டு நீங்கி, இங்கு ஒரு பொழுதும் தரியேன் - இவ்விடத்தில் ஒரு கணமும் தங்கியிருக்கமாட்டேன், கருணையினால் - இரக்கத்தால், பெரியோன் ஒருவன் - பெரிய ஒப்பற்றவனாகிய நீ, பெய் கழல் அடி - உனது கழலையணிந்த திருவடியை, கண்டுகொள் என்று காட்டி - பார்த்துக்கொள்வாயாக என்று காட்டி, பிரியேன் என்று - உன்னைப் பிரிய மாட்டேன் என்று, அருளிய அருளும் - அருளிச்செய்த உனது திருவருளும், பொய்யோ - பொய்தானோ? நாயேன் - நாயனைய யான், இன்னது என்று அறியேன் - அதன் தன்மை இன்னதென்று அறியமாட்டேன். விளக்கம் : பெரியோனாகிய இறைவன் குருவாய் வந்து உபதேசித்ததை நினைவுகூர்வார், 'பெரியோன் ஒருவன் கண்டு கொளென்றுன் பெய்கழலடி காட்டியருளிய' என்றார். பெரியோன் ஒருவன் என்றது 'பெரியோன் ஒருவனாகிய நீ' என்று முன்னிலைப்படுத்தியது. 'அப்பொழுது பிரியமாட்டேன் என்று அருளிய நீ, இப்பொழுது பிரிந்திருப்பதால் அக்காட்சி பொய்யோ?' என்று மருளுவார், 'பிரியேன் என்றருளிய அருளும் பொய்யோ?' என்றார். தம்முடைய திகைப்பு நிலையைக் காட்டுவார், 'இன்னதென் றறியேன்' என்றார். இறைவன் திருவருளைப் பிரியாதிருக்க எண்ணியபடியாம். இதனால், அருள் பெற்ற அடியார்கள் இறைவன் திருவடியைப் பிரிய விரும்ப மாட்டார்கள் என்பது கூறப்பட்டது. 2 என்பே உருக நின்னருள் அளித்துன் இணைமலர் அடிகாட்டி முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழுமுதலே
|