பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவனாகின்றேன்; ஆதலின், பத்து இலனேனும் - பற்று இல்லாதவனாயினும், பணிந்திலனேனும் - வணங்குதல் இல்லாதவனாயினும், உன் - உனது, உயர்ந்த - மேலான, பைங்கழல் காண - பசுமையான கழலையணிந்த திருவடிகளைக் காண்பதற்கு, பித்து இலனேனும் - விருப்பமில்லாதவனாயினும், பிதற்றிலலேனும் - துதித்திலேனாயினும், பிறப்பு அறுப்பாய் - என் பிறவியைப் போக்கியருள்வாயாக. விளக்கம் : பற்று, 'பத்து' எனத் திரிந்தது. முத்து, திருநீறு பூசப்பெற்ற திருமேனிக்கும், மணி, இயற்கைத் திருமேனிக்கும் உவமை. இனி, முத்து மாணிக்கம் போன்று அருமையாயிருப்பவன் எனினுமாம். இத்துணை அருமையுடைய பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர்ப் பிரிந்திருக்க விரும்பாமல் பின் தொடர்கின்றேன் என்பார், 'எத்தனையானும் யான் தொடர்ந்துன்னை இனிப் பிரிந்தாற்றேன்' என்றார். முக்கரண வழிபாடாகிய பற்றுதல் பிதற்றல் பணிதல் இல்லையெனினும், பிரிவால் உண்டாகும் துன்பம் கருதிப் பிறவியை நீக்க வேண்டும் என்று தம் எண்ணத்தைத் தெரிவித்தபடி. இதனால், இறைவன் தன்னைத் தொடர்பவர்களது பிறவியைப் போக்கி இன்பத்தைச் சேர்ப்பான் என்பது கூறப்பட்டது. 4 காணும தொழிந்தேன் நின்திருப் பாதங் கண்டுகண் களிகூரப் பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளாற் காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே. பதப்பொருள் : எம்பெருமானே - எம்பிரானே, தாணுவே - நிலையானவனே, நின் திரு பாதம் - உனது திருவடியை, காணுமது ஒழிந்தேன் - பிரிந்திருத்தலால் காண்பதை ஒழிந்தேன்; கண் களிகூரக் கண்டு - கண்கள் களிப்பு மிகும்படி பார்த்து, பேணுமது ஒழிந்தேன் - போற்றுவது ஒழிந்தேன்; பிதற்றுமது ஒழிந்தேன் - வாயால் துதிப்பதையும் விட்டேன்; நின் நினைந்து உருகும் தன்மை - உன்னை எண்ணி உருகுகின்ற இயல்பும், என் புன்மைகளால் - என்னுடைய அற்பத் தன்மையால், காணுமது ஒழிந்தேன் - தோன்றுதல் இல்லேனாயினேன்; இவற்றால், பின்னை - பிறகு, அழிந்தேன் - கெட்டேன்; அதனால், நீ இனி வரினும் - நீ இனிமேல் என் முன் வந்தாலும், காணவும் நாணுவன் - பார்ப்பதற்கும் கூசுவேன். விளக்கம் : நீண்ட காலப் பிரிவால் திருவடிக் காட்சி நினைவுக்கு வாராமையின், 'நினைந்து உருகும் தன்மை காணுதல் ஒழிந்தேன்'
|