பக்கம் எண் :

திருவாசகம்
604


என்றார். இவ்விடத்தில், 'காணுதல்' என்பது, தோன்றுதல் என்னும் பொருளது, 'தோன்றுதல் ஒழிந்தேன்' என்றது, 'தோன்றிலேன்' என்றபடி. காணுதல் இல்லையாதலின், போற்றுதலும் பிதற்றுதலும் இல்லையாம் என்றபடி, இனி, இதற்குக் காரணம் தமது இயல்பு என்பார், 'எம் புன்மைகளால்' என்றார். 'ஆனால், இனி நேரில் கண்டால் உருக்கம் வருதல் கூடும்; அப்பொழுது முன்னை நிலையினால் எனக்கு வெள்குதலும் உண்டாகும்' என்பார், 'நீ இனி வரின் காணவும் நாணுவன்' என்றார். இந்நிலைகளை நீக்கிச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபடி.

இதனால், இறைவன் திருவடியை இடைவிடாது நினைந்து உருக வேண்டும் என்பது கூறப்பட்டது.

5

பாற்றிரு நீற்றெம் பரமனைப்
பரங்கருணை யோடும் எதிர்ந்து
தோற்றிமெய் அடியார்க் கருட்டுறை
அளிக்குஞ் சோதியை நீதியிலேன்
போற்றியென் அமுதே எனநினைந்
தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் உள்ளே
ஆற்றுவ னாக உடையவ
னேஎனை ஆவஎன் றருளாயே.

பதப்பொருள் : உடையவனே - என்னை அடிமையாக உடையவனே, பால் - பால் போல வெண்மையாகிய, திருநீற்று - திருநீற்றையணிந்த, எம் பரமனை - எம் மேலோனும், பரம் கருணையோடும் - மேலான கருணையோடும், எதிர்ந்து தோற்றி - எதிரே வந்து காணப்பட்டு, மெய் அடியார்க்கு - உண்மை அடியவர்களுக்கு, அருள் துறை அளிக்கும் - அருள் வழி நல்கும், சோதியை - ஒளிப்பிழம்பும் ஆகிய உன்னை, நீதி இலேன் - அறநெறி இல்லாத யான், என் அமுதே - எனது அமுதமே, என நினைந்து ஏத்தி - என்று எண்ணித் துதித்து, புகழ்ந்து அழைத்து - போற்றி அழைத்து, அலறி - அலறாநின்று, என் உள்ளே ஆற்றுவன் ஆக - என் மனத்தில் ஆறுதல் அடையும்படி, எனை - அடியேனுக்கு, ஆவ என்று அருளாய் - ஐயோ என்று இரங்கி அருள் புரிவாயாக.

விளக்கம் : 'இறைவன் அடியார்க்கு அருளும் நெறியினை நினைந்து யான் உருக வேண்டும்' என்பார், 'போற்றியென் அமுதே என நினைந்தேத்திப் புகழ்ந்தழைத்தலறி' என்றார், 'அவ்வாறு போற்றிப் புகழ்வேனாயின், எனது கூச்சம் தவிர்ந்து மனத்தில் ஆறுதல் உண்டாகும் என்பார், 'என் உள்ளே ஆற்றுவனாக' என்றார். அவ்வாறு தலையளித்து அருள வேண்டும் என்று எண்ணியபடி.

இதனால், இறைவன் கருணையை எண்ணி உருகினால் ஆறுதல் உண்டாகும் என்பது கூறப்பட்டது.

6

திருச்சிற்றம்பலம்